வவுனியாவில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு!!

509

பௌத்த மாநாடு

வடமாகாணத்தில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு இன்று (29.03) வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தலைமை சங்கநாயக்க தேரரும், வவுனியா ஸ்ரீபோதிதக்சினராமாய விகாரதிபதி சங்கைக்குரிய சியம்பலாகஸ்வௌ விமலசார நாயக்க தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாணத்தை மையமாக கொண்டு புத்தசாசன அமைச்சின் ஒத்துழைப்புடன், வட மாகாண பௌத்த சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சமய நல்லிணக்கத்தையும், இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கையாக வவுனியாவில் பௌத்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் அதிதிகள் இந்து, பௌத்த மற்றும் முஸ்லிம் கலாசார நடனங்களுடன் அழைத்து வரப்பட்டதுடன், மத அனுஸ்டானங்களுடன் பௌத்த தேரர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு சர்வமத சமய பெரியார்களின் ஆசிச் செய்தியுடன் பௌத்த மாநாடு ஆரம்பமாகியது.

புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணத்தின் அனைத்து பௌத்த வணக்கஸ்தலங்களின் நாயக்க தேரர்கள், வணிகத்துறை பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கனீபா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா இராணுவ பாதுகாப்பு படை கட்டளை தளபதி, வட மாகாண கடற்படை மற்றும் விமானப்படை கட்டளைத் தளபதிகள், வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.