வவுனியாவில் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த பேரிடியான தகவல்!!

657

அகதியாக இந்தியா சென்றிருந்த நிலையில், தாயகம் திருப்பியுள்ள பெண் ஒருவருக்கு சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமையால் அந்த பெண் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ்நிலையத்திற்கு அருகாக பௌத்தவிகாரை ஒன்று அமைக்கபட்டுள்ளது. குறித்த விகாரைக்கு பின்புறமாக அமைந்துள்ள காணியில் விகாரையை பராமரித்து வரும் பிக்கு மற்றும் சிலர் தங்குவதற்கான இரண்டு தங்கு விடுதிகள் அமைக்கபட்டுள்ளது.

குறித்த கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ள 3 ஏக்கர் காணியானது தனக்கு சொந்தமானது என்றும் அதனை துப்புரவாக்க சென்ற போது அருகில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக குறித்த காணியினை உரிமைகோரும் பெண் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், நான் போர்ச் சூழல் காரணமாக 2006 ஆம் அண்டு குடும்பத்துடன் இந்தியாவிற்கு அகதியாக சென்றிருந்தேன். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பியிருந்தேன். எனது காணியினை பார்க்கச்சென்ற போது அங்கு இரு கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும் நான் எனது காணியினை துப்புரவாக்க முயற்சித்தபோது அருகில் இருந்த ராணுவத்தினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி அச்சுறுத்தியிருந்தனர்.

தற்போது வீட்டுதிட்டம் கிடைக்க பெற்றுள்ளநிலையில் காணிப்பிரச்சினை காரணமாக வீட்டை அமைக்கமுடியாமல்உள்ளது. குறித்த கட்டிடம் அமைக்கபட்டுள்ள இடத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் எனக்கு காணி தருவதாக வவுனியா வடக்கு பிரதேச் செயலர் தெரிவிக்கின்றார். அது காட்டுபகுதியாக உள்ளது அங்கு எம்மால் வசிக்கமுடியாது என்று குறித்த பெண் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அப்பெண்ணால் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கபட்டிருந்த நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றிருந்தது. இதன்போது அருகில் இருந்த ராணுவ முகாமின் பொறுப்பதிகாரி மற்றும் 56 ஆவது படைபிரிவின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி, பிரதேசசெயலக உத்தியோகத்தர் ஆகியோர் ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கபட்டிருந்தனர்.

இதன்போது எந்த அடிப்படையில் குறித்த காணி விடயத்தில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என விசாரணை அதிகாரிகளினால் ராணுவத்தினரிடம் கோரப்பட்டிருந்தது. இதன்போது தாம் அவர்களை அச்சுறுத்தவில்லை என்றும் பௌத்த பிக்கு ஒருவர் குறித்த விகாரை அமைந்துள்ள காணியினை பராமரித்து தருமாறு எம்மை கோரியமைக்கு அமைவாகவே நாம் அதனை பராமரித்து வந்தோம்.

எனினும் காணி தொடர்பான அதிகாரங்கள் எமக்கு இல்லாதபடியால் குறித்த விடயத்தில் இருந்து நாம் முழுமையாக ஒதுங்கிகொள்வதாக தெரிவித்ததுடன், அதனை ராணுவத்தினர் எழுத்துமூலமும் வழங்கியிருந்ததாக மனிதஉரிமை ஆணைக்குழு தெரிவித்தது.

இதேவளை இவ்விடயம் தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச்செயலர் க. பரந்தாமனிடம் கேட்டபோது குறித்த காணிபிரச்சினை தீர்கபட்டுள்ளதாகவும் குறித்த கட்டிடம் அமைக்கபட்டுள்ள இடத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள காணி குறித்த பெண்ணுக்கு வழங்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் அது தமது விருப்பத்திற்கு மாறாகவே தரப்பட்டுள்ளதாக குறித்தகாணியினை உரிமைகோரும் பெண் மனிதஉரிமை ஆணைக்குழுவில் எழுத்து மூலம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மனிதஉரிமை ஆணையத்தில் கடமையில் இருந்த அதிகாரியான சட்டதரணி லீனஸ் வசந்தராஜாவிடம் கேட்டபோது. முறைப்பாட்டாளரான பெண் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர் என்ற ரீதியில் இவ்விடயத்தில் நாம் ஆளமான கரிசனைகொண்டுள்ளோம்.

இவ்விடயத்தில் பிரதேச செயலகமே சரியான முடிவை வழங்கவேண்டும். பௌத்தவிகாரை அமைக்கபட்டுள்ள 5 ஏக்கர்அளவான காணியானது 2010 ஆம் ஆண்டளவில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் பௌத்தவிகாரை அமைப்பதற்கு வழங்கபட்டுள்ளது. எனினும் அதற்கான உரிமை பத்திரங்கள் வழங்கபடவில்லை.

2010 ம் ஆண்டளவில் மீள் குடியேற்றசெயற்பாடுகள் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் அந்தக் காணியின் உரித்து தொடர்பாக முறையாக ஆராயாமல் பிரதேச்செயலகத்தால் விகாரை அமைப்பதற்காக அது வழங்கபட்டுள்ளது.

எனவே இவ்விடயத்தில் காணியினை உரிமைகோரும் பெண்ணின் சம்மதத்துடன் அவர் விரும்புகின்ற தீர்வை வழங்குவதற்கு பிரதேச்செயலகம் ஒத்துழைக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு மனித உரிமை ஆணைக்குழுவால் கடிதம் ஒன்றும் அனுப்ப படவுள்ளதாகவும் தெரிவித்தார்.