வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடும் வாக்குவாதம் : த.தே.ம. முன்னணி வெளிநடப்பு!!

412

த.தே.ம. முன்னணி வெளிநடப்பு

வவுனியா வடக்கு பிரதேசசபையின் இன்றைய அமர்வில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். வவுனியா வடக்கு பிரதேசசபையின் அமர்வு இன்று (11.04) நெடுங்கேணி பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் சபையின் தலைவர் ச.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையில் கடந்த கூட்ட அறிக்கை முன்வைக்கப்பட்ட போது, அறிக்கையில் தவறிருப்பதாக ஒரு சில உறுப்பினர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது பதினான்கு உறுப்பினர்கள் கூட்ட அறிக்கை பிழையானது என வாக்களித்தமைக்கு அமைவாக அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதன் பின்னர் உறுப்பினர்களிற்கான நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் போது பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் சபையில் ஏற்பட்டது. தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சஞ்சுதன் தனது கருத்திலே,

தங்களது பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றும், தங்களது வட்டாரத்திற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தவிசாளர் பக்கசார்பாக செயற்படுகிறார் என்றும் கருத்து தெரிவித்ததற்கு அமைவாக தவிசாளருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

இதனால் இச்சபை நடவடிக்கையில் இருந்து தாம் வெளியேறுவதாக கூறி சபையை விட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வி.சஞ்சுதன், நிரஞ்சினி, விஜிகரன் ஆகியோர் வெளியேறிச்சென்றனர்.

இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமது கட்சிக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.