வவுனியா நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வெளிநடப்பு!!

342

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வெளிநடப்பு

பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டம் தொடர்பான நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகன் வெளிநடப்பு செய்துள்ளார்.

மாகாணசபை, உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச அபிவிருத்தி ஒதுக்கீடுகளில் விகிதாசாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்குகொள்ள முடியாது என்றும்,

வெற்றிபெற்ற உறுப்பினர்களே ஒதுக்கீடுகளில் பங்குகொள்ள முடியும் என சட்டம் உள்ளதாக நகரசபை செயலாளர் தெரிவித்ததையடுத்து குறித்த கூட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டாரம் ஒன்றைச் சேர்ந்த உறுப்பினர் வெளிநடப்பு செய்திருந்த நிலையில் சபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இதனையடுத்து எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகன், எனது வட்டாரத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக எனக்கு தெரியாமல் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அரசியல் ரீதியாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தங்களை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகனின் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த நகரசபை முதலாம் வட்டாரத்தை சேர்ந்த உறுப்பினர் எஸ்.காண்டீபன், நகரசபையிலிருந்து குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக இணைப்பாளர்கள் கோரப்பட்ட நிலையில் நான் இணைப்பாளர்களை தெரிவு செய்து வழங்கியிருந்தேன் என தெரிவித்தார்.

மேலும் இப்பிரச்சனை தொடர்பாக விகிதாசாரத்தின் மூலம் நகரசபைக்கு தெரிவாகியிருந்த உறுப்பினர்களான சமந்தா ஜெபராணி மற்றும் எஸ்.பாலபிரசன்னா ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.