வவுனியா மடுக்குளத்தில் சிறுபோகத்திற்கான தண்ணீரை நபரொருவர் தடுத்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!!

493

விவசாயிகள் குற்றச்சாட்டு

வவுனியா மடுக்குளத்தில் சிறுபோகத்திற்கு குளத்திலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நபரொருவர் அடாத்தாக தடுத்து நிறுதியுள்ளதாக மடுக்குளம் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா மடுக்குளம் கிராமத்தில் சிறுபோக நெற்செய்கைக்காக நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் நெற்செய்கை காணியில் குறித்த நபர் கிராம மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 13 ஏக்கர் வயல் நிலத்திற்கு அலியா மருதமடுக்குளத்திலிருந்து தண்ணீர் திறந்து விடாமல் அடாத்தாக தடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த நபரின் அடாவடித்தனம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கும் மடுக்குளம் விவசாயிகள் இப்பிரச்சனை தொடர்பாக நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகத்திலும் எழுத்து மூலம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அரச திணைக்களத்தின் முடிவுகளை மீறி அடாவடித்தனமாக செயற்பட்டுவரும் குறித்த நபரின் செயற்பாடு காரணமாக கிராமத்தில் சிறுபோக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாகவும் கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் கிராமத்தின் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.