பாட்டியை மகிழ்விக்க யுவதி மேற்கொண்ட முயற்சி : இறுதியில் நேர்ந்த விபரீதம்!!

510

நேர்ந்த விபரீதம்

இதயத்துடிப்பு மானி (stethoscope) ஒன்றை கழுதில் மாட்டி கொண்டு மருத்துவரை போல் எல்பிட்டிய வைத்தியசாலையில் நடமாடிய யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிலான என்ற பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யுவதி மருத்துவராக வர வேண்டும் என்று யுவதியின் பாட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்துள்ளது எனவும், எனினும் பாட்டியின் எதிர்பார்ப்பை யுவதியால் நிறைவேற்ற முடியாது போனதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயர் தரத்தில் கலை பிரிவில் பயின்றுள்ள இந்த யுவதி, பின்னர் மனநல பாடநெறியை படித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் இதயத்துடிப்பு மானியை (stethoscope) பாட்டி, யுவதிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

பாட்டியின் நண்பி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாட்டியை மகிழ்விக்க இதயத்துடிப்பு மானியுடன் (stethoscope) வைத்தியசாலைக்கு சென்றுள்ள யுவதி, அங்கு சுற்றித்திரிந்துள்ளார்.

இதயத்துடிப்பு மானியுடன் (stethoscope) பெண்ணொருவர் வைத்தியசாலைக்குள் சுற்றி திரிவதாக வைத்தியசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, எல்பிட்டிய பொலிஸார் யுவதியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யுவதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். எல்பிட்டிய தலைமையக பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.