முல்லைத்தீவு வைத்தியசாலையில் சீரான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் சடலம்!!

246

பழுதடைந்த நிலையில் சடலம்

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் சீரான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இறந்தவரின் சடலம் பழுதடைந்து சீல்வைக்கப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 15.04.2019 அன்று மல்லாவி, துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் அன்றைய தினமே முல்லைத்தீவில் அமைந்துள்ள மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு மறுநாள் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் சடலத்தை யாரும் பார்வையிட முடியாத அளவிற்கு மூடி கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு விபத்தில் இறந்த அவருடைய உடலை ஏன் இவ்வாறு மூடி கட்ட வேண்டும்.

உடலைப் பாதுகாக்கும் இடத்தில் மின்சாரம் இல்லாத காரணமா? மருத்துவ அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருந்தமையா? என உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலை வைத்திருக்க முடியாத நிலை இன்றும் தொடர்கின்றது.

நேற்று முன் தினம் முள்ளியவளை பகுதியில் வெப்பத்தினால் உயிரிழந்தவரின் சடலம் கூட உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதால் மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-