நீர் கொழும்பு குண்டுத்தாக்குதலில் தப்பிப் பிழைத்த இலங்கை கிரிக்கட் வீரர்!!

413

இலங்கை கிரிக்கட் வீரர்

நீர் கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் தாம் தப்பிப் பிழைத்ததாக பிரபல கிரிக்கட் வீரர் தசுன் சங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தினமன்று நிச்சயமாக தாம் தேவாலயம் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது வழமை என்ற போதிலும், சனிக்கிழமையன்று 170 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து அனுராதபுரத்திலிருந்து வீடு வந்த காரணத்தினால் களைப்பு காரணமாக தாம் தேவாலயம் செல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார். எனினும், தாயும் பாட்டியும் தேவாலயத்திற்கு சென்றிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெய்வாதீனமாக இரண்டு பேரும் காயங்களுடன் உயிர் பிழைத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேவாலயமும் சிதிலமாகியிருந்தது எனவும் அந்தக் காட்சியை பார்த்த எவரும் தேவாலயத்திற்குள் இருந்த எவரும் உயிருடன் இருப்பார்கள் என நம்ப மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவாலயத்திற்கு விரைந்த போது முதலில் தாயை தேட வேண்டுமென்பதே எனது இலக்காக இருந்தது, நானும் நாண்பர்களும் தாயை தேடிக் கண்டு பிடித்தோம் அவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். பின்னர் பாட்டியாரைத் தேடிக் கண்டு பிடித்தோம் அவரைச் சுற்றியிருந்த அனைவரும் பிணமாகவே கிடந்தனர், தெய்வாதீனமாக பாட்டி உயிருடன் இருந்தார்.

உடனடியாக அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினோம். இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் சகவாழ்வான மக்கள் அடுத்தவரை பற்றி புறம் பேசாது தங்களுடைய பணிகளைளே மேற்கொள்ளும் மக்கள், இந்த சம்பவம் பேராதிர்ச்சியையும் கவலையையும் நீங்கா வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.