வவுனியாவில் இன, மத நல்லுறவை வலுப்படுத்த மாவட்ட சர்வமதக் குழுவால் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர்!!

274

இன, மத நல்லுறவை வலுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் முகமாக சர்வமத குழுவினருக்கும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவுக்கும் இடையில் இன்று மாவட்ட செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது சர்வமத குழுவினரால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுவதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் இன, மத, பேதமின்றி ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதுடன், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொடுரமான தாக்குதல்களை வவுனியா மாவட்ட சர்வ மதக் குழுவினர் ஆகிய நாம் வன்மையாக கண்டிப்பதுடன், வவுனியாவில் மூன்று இனத்தவர்களும், நான்கு மதத்தவர்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அதற்கு சர்வமத குழு ஒத்துழைப்பு வழங்கும். வவுனியா மாவட்ட அரச அதிபரும் ஏனைய அதிகாரிகளும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவ வேண்டும் என கோரியிருந்தனர்.

இதன்போது பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதத்தலைவர்கள் கலந்து கொண்டதுடன் குண்டு தாக்குதல் தொடர்பில் தமது கவலையை தனித்தனியாக வெளிப்படுத்தியதுடன், ஒற்றுமையாக பயணிப்பது குறித்தும், தற்போதைய நிலமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் அரச அதிபருடன் கலந்துரையாடியிருந்தனர்.

அரச அதிபரும் இன, மத ரீதியாக அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் இருக்க அனைத்து அதிகாரிகளும், முப்படையினரும், பொலிசாரும், ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் எந்நேரமும் ஏதாவது பிரச்சனைகள் எனில் மாவட்ட செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இதன்போது தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மதத்தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர், உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.