2 மாதங்களாக வீடு திரும்பாத காதல் மனைவி : உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கணவன் எடுத்த முடிவு!!

251

தர்மபுரியில் காதல் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதால், விரக்தியில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (26) என்பவர் தன்னுடைய கல்லூரி காலத்தின் போது, ஜெயபிரியா என்பவரை காதலித்துள்ளார்.

இவர்களுடைய திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து பெண் வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய பொலிஸார் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் தங்கி படித்து வந்த தம்பியின் அறைக்கு சென்ற சசிகுமார், ஆள் இல்லாத சமயம் பார்த்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும்போது சசிகுமார் எழுதிய வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், நானும் எனது மனைவி ஜெயபிரியா என்பவரும் 4 வருடங்களாக காதலித்து 17.7.2017 அன்று திருமணம் நடந்தது.

அந்த திருமணம் பல பிரச்சினைகளை கடந்த காதல் திருமணம். எங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருந்தது.

திருமண வாழ்க்கை 2 வருடம் அதில் ஒரு குழந்தை உருவாகி அந்த குழந்தை 4 மாதம் இருந்து இதயதுடிப்பு இல்லை என்று கருக்கலைப்பு செய்யப்பட்டது.

அதற்கு பின்பு எனது மனைவியை இன்னும் அதிகமாக நேசித்தேன். எனக்கும், ஜெயபிரியாவுக்கும் எந்தவித சண்டையும் வந்தது இல்லை. அவள் கோபப்படுவாள் ஆனால், 5 நிமிடத்தில் சரியாகிவிடும்.

எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 4.2.2019 தான். அன்று வேலையின் காரணமாக நான் வெளியூருக்கு சென்று விட்டேன். எனது மனைவி 6.2.2019 அன்று எனக்கு செல்போனில் தொடர்புக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறினாள். திருமணம் முடிந்து 2 வருடம் ஆகிறது. எனவே, அங்கு உள்ள பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றாள். நான் அப்போது வேண்டாம் என்று கூறினேன்.ஆனால் தாயாருக்கு போன் செய்து விட்டாள் என்று கூறினாள்.

அதன் பின்பு என்னையும் எனது மனைவியையும் அவரது தாயார் ஜோதி பேச அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதற்குள் அவளை அவரது சொந்த ஊரான சின்னமட்டாரபள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

அங்கு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்தேன். ஆனால் அங்கு எனக்கு உரிய மரியாதை தரவில்லை. பின்பு தான் அவர் வீட்டிற்கு சென்று பேசலாம் என்று கருதி நான் அங்கு சென்றேன். அங்கு எனது மனைவியின் தாயார் என்னை செருப்பால் அடித்து விரட்டினார்.

எனது மனைவியை பார்த்து 3 மாதம் ஆகிறது. மீண்டும் எனது நண்பர்களை அழைத்து கொண்டு மனைவியின் தாயார் வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது மாமியார், மாமனார் ஆகியோர் என்னை செருப்பால் அடித்து விரட்டி அனுப்பினர். மேலும் என் மீது 3½ பவுன் நகை திருடியதாக பொய் புகார் பொலிஸில் கூறினர்.

அப்போது நான் நடத்த உண்மையை பொலிஸாரிடம் வாக்குமூலமாக கூறியதால் அவர்கள் என்னை திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.

ஆகையால் நான் எனது மனைவிக்காக எல்லாத்தையும் இழந்து விட்டேன். இனி என்னால் எனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அதிக கஷ்டம் கொடுத்துவிட்டேன். மேலும் நான் அவமானப்பட்டேன்.

இது எனது வாழ்க்கையின் இறுதி கடிதம். எனது மரணத்திற்கு முக்கிய காரணம் ஜோதி, ஓம் சக்தி மற்றும் மனைவியின் சித்தி ஆகியோர் ஆவர். எனது மனைவியிடம் என்னைபற்றி தவறாக கூறி என்னை பிரித்து விட்டனர்.

நான் எனது மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தேன். அதனால் என்னால் அவளை மறக்க முடியாது. அவள் இல்லாமல் என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. இனி என் மனைவியின் குடும்பம் சந்தோசமாக இருக்கும். எனது குடும்பத்துக்கு என்னை பெற்றதற்காக அவமானத்தை பெற்று கொடுத்துவிட்டேன்.

எல்லாருக்கும் சாரி என்னை மன்னித்து கொள்ளுங்கள். ஜெய் மட்டும் தான் எப்பவும் நான் நினைப்பேன். நாம் சுத்தின காலங்கள் நினைவுக்கு வரும் அப்போது நான் இருக்க மாட்டேன் என எழுதியுள்ளார்.