வவுனியா ஏ9 வீதியில் மர்மப் பொதியினால் பரபரப்பு : 30 நிமிடம் போக்குவரத்துத் தடை!!

590

வவுனியா ஏ9 வீதி, சாந்தசோலை சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் காணப்பட்ட மர்மப் பொதி ஒன்றினால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பதற்றமான நிலமை காணப்பட்டதுடன், 30 நிமிடங்கள் ஏ9 வீதி போக்குவரத்தும் தடைப்பட்டது.

ஏ9 வீதி சாந்தசோலை சந்தசோலை சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் மர்மப் பொதி ஒன்று கிடப்பதாக 3.15 மணியளவில் இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் பதற்றமான நிலை காணப்பட்டது.

ஏ9 வீதி போக்குவரத்தினை தடை செய்த இராணுவத்தினர் குண்டு செயலிழக்கச் செய்யும் படைவீரர்களின் உதவியுடன் குறித்த மர்மப்பொதியை சோதனை செய்தனர்.

இதன்போது குறித்த பொதியில் வெடிபொருட்கள் எவையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பொதியினை அவ்விடத்தில் வைத்து விட்டு யாழ் நோக்கிச் சென்ற பேரூந்து ஒன்றினை தவற விட்டதால் விரட்டிச் சென்றதாகவும், அப் பொதி தன்னுடையது எனவும் ஒரு இளம் குடும்பத்தினர் வருகை தந்து குறித்த பொதியினை இராணுவத்தினரிடம் உரிமை கோரினர்.

இதனையடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்த இராணுவத்தினர் குறித்த பொதியை அவர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் காரணமாக ஏ9 வீதி போக்குவரத்து சுமார் அரை மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

இதேவேளை வீதி ஓரங்களில் எந்தவொரு பொதியினையும் வைக்க வேண்டாம் எனவும், வாகனங்களை அடையாளப்படுத்தாது நிறுத்த வேண்டாம் எனவும் இராணுவத்தினர் அறிவுறுத்தினர்.