அன்று பசி, வறுமை கொத்தடிமையாக வேலை பார்த்த பெண் : இன்று 10 பேருக்கு ஊதியம் வழங்குகிறேன்!!

589

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 10,000 ரூபாய்க்கு கொத்தடிமையாக வேலை பார்த்தேன், இப்போது 10 பேருக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

உலகம் முழுவதிலும் இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உழைப்பின் மூலம் இன்று உயர்ந்து சிலருக்கு வேலை தரும் பெண்ணாக நிற்பவர் தான் தையம்மா, அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அதில், வேலூர் மாவட்டத்திலுள்ள அத்தியாணம் என்பதுதான் எங்களுடைய சொந்த ஊர். நாங்கள் தினமும் கூலி வேலைக்குச் சென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயில்தான் வாழ்வை நடத்திவந்தோம்.

விவசாயத்தில் பெரிய லாபம் இல்லாததால், கூலி வேலை கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம். அப்போதுதான் என் கணவர் எங்க ஊருக்குப் பக்கத்திலிருந்த விறகு விற்கும் பெரு முதலாளி ஒருவரிடம் வேலைக்குப் போனார்.

அதே காலகட்டத்தில்தான் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. பெரிய கனவுகளோடு திருமண வாழ்வை வாழ ஆரம்பித்திருந்த காலம் அது. ஆனால், அதன்பின் நடந்ததை எப்படி மறக்க முடியும்.

அப்போது எங்கள் குழந்தைக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போக முதலாளியிடம் வெறும் 1000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு சென்றோம்.

மருத்துவமனையிலிருந்து ஊருக்கு திரும்பி வர மூன்று நாட்கள் ஆகியது, அதற்குள் நாங்கள் ஏதோ ஊரை விட்டு ஓடிவிட்டோம் என்று மாமியாரை வீட்டிற்குள் புகுந்து தாக்கியிருந்தனர்.

நாங்கள் வந்த பின்பு எங்களையும் அடித்து வேலைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். முதலில் நாங்கள் எங்கள் வீட்டில் இருந்துதான் அந்த விறகு வெட்டும் இடத்துக்குப் போயிட்டு வந்தோம்.

ஆனா, நீங்கள் வீட்டுல இருந்து வந்திங்கனா ஒழுங்கா வேலை செய்ய மாட்டிங்க இங்கவே தங்குங்க’னு எங்களை ஒரு மாமரத்துக்கு அடியில தங்க வச்சிட்டுங்கா. நாங்க கொத்தடிமை வாழ்க்கைதான் வாழுறோம்னு தெரியாமலேயே அந்த வாழ்வை வாழ ஆரம்பிச்சிட்டோம்.

நாள் முழுவதும் விறகு வெட்டனும் அதுமட்டுமே வாழ்க்கையாக இருந்தது. எவ்வளவுதான் உழைத்தாலும் சம்பளமென்று எல்லாம் ஒன்றும் கிடைக்காது.

வாரம் ஐந்நூறு ரூபாய் கொடுத்து அதை மூணு குடும்பத்தைப் பிரித்து எடுத்து கொள்ள சொல்வார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து வாங்கின கடனை கூட அடைக்க முடியாது.

பசி, நோய், விரக்தி இவற்றுக்கிடையேதான் நாங்கள் ஐந்து ஆண்டுகள் கழித்தோம். அப்போது தான் திடீரென்று எங்களைப் பற்றி அறிந்த அரசு அதிகாரிகள் எங்கிருந்தோ வந்து எங்களை மீட்டனர்.

அதன் பிறகு அரசு அளித்த நிதிகளைக் கொண்டு, நாங்களே எங்களுக்குத் தெரிஞ்ச விறகு விற்கும் தொழிலைத் தொடங்கினோம். இப்போ, எங்களுடன் இணைந்து பத்துப் பேர் வேலை செய்கிறார்கள்.

வரும் வருமானத்தில் அனைவரும் நியாயமான முறையில் பகிர்ந்துகொள்கிறோம். யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் மட்டும் கிடைத்தால், அடிமையிலிருந்து அதிபதியாக மாறலாம் என்று கூறியுள்ளார்.