வவுனியாவில் 24 பேர் கைது : ஹயஸ் ரக வாகனம் மற்றும் 4 வாள்களும் மீட்பு!!

1194

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இன்று வரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4 வாள்கள் மற்றும் ஹயஸ் ரக வாகனம் ஓன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் வவுனியாவில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரம், பசார் வீதி, பட்டக்காடு, பட்டானிச்சூர்புளியம்குளம், அரபா நகர், மதீனநகர், வேப்பங்குளம், சூசைப்பிள்ளையார்குளம், தர்மலிங்கம் வீதி, மில் வீதி என பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகள், பொது கட்டிடங்கள், வீதிகள், வாகனங்கள் என்பன சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் சுற்றிவளைப்பு தேடுதல்களும் இடம்பெற்றன.

இதில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு வேறு இடங்களில் 4 வாள்களும், ஓரு ஹயஸ் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வவுனியாவில் பாதுகாப்பிற்காக 31 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் கனகராயன்குளம் பகுதியில் ஓரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.