என்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட பொறியியலாளர்!!

377

இந்தியாவில் தன்னுடைய சாவிற்கு யார் காரணம் என்று இன்ஜினியர் ஒருவர் பிரிட்ஜில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி எத்தனை சோகம் இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அஸ்ஸாமில் ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் கீழ் நாகோன் என்ற ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை கடந்த 2015-ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்த ஆலை மூடப்பட்ட போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அதன் பின் 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மூடப்பட்ட ஆலை திறக்கப்படும் என்று பா.ஜ.க வாக்குறுதி கொடுத்தது.

ஆனால் பா.ஜ.க ஆட்சியையும் கைப்பற்றியும் அந்த ஆலை திறக்கப்படவில்லை. மாறாக 2017-ஆம் ஆண்டு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி மற்றொரு யூனிட் மூடப்பட்டது.

இதனால் ஏராளமான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். 2018-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டத்தை ஊழியர்கள் நடத்தினர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, எங்கள் வாழ்க்கையைக் கண்ணியமாக வாழ முடியவில்லை என்றால் இறப்பதே மேல் என்று கடிதம் எல்லாம் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் பிஸ்வாஜித் மஜும்தார் என்பவர் இதே பேப்பர் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 28 மாதங்களாக இவருக்கு ஊதியம் கொடுக்கப்படாத காரணத்தினால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான இவர் நாகோன் ஆலைக்குச் சொந்தமான ஊழியர்களின் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 29-ஆம் தேதி நீண்ட நேரமாகியும் இவரது வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் கதவில் தற்கொலைக்காக காரணத்தை எழுதியுள்ளார்.

அதில் நான் செல்கிறேன், எனது மரணத்துக்கு இந்திய அரசாங்கம்தான் காரணம் என எழுதியிருந்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இவரது மரணத்துக்கு முந்தைய நாள் தான் அதே காகித ஆலையில் பணியாற்றிய டெக்னீசியன் ஒருவர் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் இறந்துள்ளார்.

இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், நிதி சிக்கலே இந்த மரணத்துக்குக் காரணமாக உள்ளன.

கடந்த 28 மாதங்களாகச் சம்பளம் இல்லை. எங்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. எங்களுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் கண்முன்பே மரணிப்பது வேதனையாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த பேப்பர் மில்லால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 51 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.