குடும்பத்தை பார்த்துக்கொள்.. நான் சாகப்போகிறேன் : மனைவிக்கு போன் செய்து கடைசியாக பேசிய கணவனின் கண்ணீர்!!

557

தமிழகத்தில் லொரிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால், நிதி நிறுவனத்தின் அதிகார்களின் மிரட்டலுக்கு பயந்து ரமேஷ் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ராஜாபாளையத்தில் உள்ள சைக்கிள்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40) விவசாயியான இவருக்கு தமிழ்ச் செல்வி என்ற மனைவியும் 14 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் நாமக்கலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இதற்காக மாதந்தோறும் கடன் தவணையை செலுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தவணை செலுத்தவில்லை என்பதால் நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ தினத்தன்று ரமேசின் வீட்டிற்கு சென்று, சரியாக பணத்தை கட்ட சொல்லுங்கள், இல்லையென்றால் லாரியை பறிமுதல் செய்துவிடுவோம் என்று எச்சரித்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் திகதி திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. சிட்டி பகுதிக்கு வந்த ரமேஷ், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, அவரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு போன் செய்து, லாரிக்கான பணத்தை தன்னால் கட்ட முடியாத காரணத்தினாலும் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டிச் சென்றதாலும் மனமுடைந்து, தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், குடும்பத்தை பார்த்து கொள் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி உடனடியாக தன்னுடைய உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்த போது, அங்கு ரமேஷ் வி‌ஷம் குடித்த நிலையில், லாரி ஸ்டீரிங்கில் படுத்தவாறு கிடந்தார்.

இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி கொடுக்கப்பட்டு, அதன் பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்றிரவு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, கடிதம் ஒன்றையும் எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார்.

அதில், நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறியுள்ளார். அந்தக் கடிதத்தை பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பு தன் இறப்புக்கு நிதி நிறுவன அதிகாரிகளே காரணம் என்று கூறி வீடியோ பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.