இலங்கை படையினருக்கான பயிற்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூடாது : இந்திய பாதுகாப்பு அமைச்சு!!

299

indஇலங்கையின் படையினருக்கு பயிற்சியளிக்கும் விடயத்தை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அந்த நாட்டின் நாடாளுமன்ற செயலகத்திடம் கோரியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி பாதுகாப்பு இராஜதந்திர நிலைக்குள் வருவதால் அதனை விவாதத்துக்கு விடுவது சாத்தியமில்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியின் அமைச்சில் இருந்து இதற்கான வேண்டுகோள் இந்திய நாடாளுமன்ற செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழக தென்காசி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் இது தொடர்பான வேண்டுகோள் கடந்த 13 ஆம் திகதி நாடாளுமன்ற செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கு பயிற்சிகளை வழங்குவது என்பது அந்த நாடுகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

அது தேசிய நலன்சார்ந்த விடயமாக உள்ளதால் அதனை நாடாளுமன்ற விவாதத்துக்கு உட்படுத்துவது பொருத்தமாகாது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் தமிழகத்தை சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய கொம்யூனிச கட்சி என்பன இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன.