வவுனியா மாவட்ட மக்களுக்கான பொலிசாரின் அவசர அறிவித்தல்!!

572

வவுனியாவில் வாடகைக்கு வீடுகளில் தங்கியிருப்பவர்களின் விபரங்கள் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஐயாத்துரை மண்டபத்தில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று பாடசாலையின் அதிபர் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,

கிராமத்திற்கு புதியவர்களின் வருகை தொடர்பாக நீங்கள் விழிப்புடன் செயற்படுவதுடன் உங்களது உறவினர்கள் வந்து உங்களது வீடுகளில் தங்கும்போது அவர்கள் தொடர்பான விபரங்களை பொலிஸ் நிலையங்கள் மற்றும் கிராம அலுவலகரிடம் வழங்கவேண்டும்.

உங்களுக்கு இரண்டு, மூன்று வீடுகள் இருக்கலாம் அவ்வீட்டை நீங்கள் வாடகைக்கு வழங்கும்போது அங்கு தங்கியிருப்பவர்களின் விபரங்கள் அனைத்தும் கிராம அலுவலகருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் உங்களிடமும் பதிவுகள் இருப்பதுடன் பொலிசாருக்கும் அதன் விபரங்களை வழங்கவேண்டும்.

தற்போது எமது நாட்டில் அவரசகாலச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் கடமைகள் வழங்கப்பட்டுள்ளது எங்கு சென்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது ஒரு நபரைக் கைது செய்வதற்கு அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உங்களது கிராமத்திற்கு வரும் நபர்கள் தொடர்பாக நீங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். கிராமத்தில் வசிப்பவர்களுக்கு அங்குள்ளவர்களை நன்று தெரியும்.

அவ்வாறு புதியவர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்க வேண்டும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 23 கிராம சேவையாளர் பிரிவுகள் இருக்கின்றன.

இந்த 23கிராம அலுவலகர் பிரிவிலிருக்கின்ற பொதுமக்கள் நான் கூறியவற்றை பின்பற்றி நீங்கள் செயற்படுவீர்களாக இருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியும்.

வவுனியா நகரை பாதுகாப்பதற்கு உங்களது முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கி பாடசாலைகளுக்கு உங்களது பிள்ளைகளை அனுப்பிவைக்கவும் பாடசாலையில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் அவர்களுக்கான பாதுகாப்பினை வழங்க நாங்கள் இருக்கின்றோம்.

பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்து வரும்பெற்றோர்கள் பாடசாலையின் முகப்பு பகுதியில் இறக்கிவிடாமல் சற்று தொலைவில் இறக்கிவிட்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு உடனடியாக நகர்ந்து சென்றுவிடவேண்டும். என்று மேலும் தெரிவித்துள்ளார்.