சிவில் ஆளுநர், இராணுவ பிரசன்னம் தொடர்பில் மன்னார் ஆயரின் கருத்துக்கள் ஏற்கமுடியாது : கெஹலிய ரம்புக்வெல்ல!!

883

kehaliyaவடமாகாண ஆளுநர் குறித்த எந்தவொரு விடயமும் அரசியலமைப்புக்கு அமைய முன்னெடுக்கப்படுமே தவிர எந்தவொரு சபைகளின் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு எடுக்கப்படாதென அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கூறினார்.

சிவில் ஆளுநர், இராணுவப் பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கத்தோலிக்க ஆயர் பேரவை சார்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ள போதிலும் அவை வெறும் யோசனைகளாக மாத்திரமே ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர எக்காரணம் கொண்டும் அரசியலமைப்பு விதிகளை மீறிச் செயற்படுத்த முடியாதெனவும் அமைச்சர் உறுதியாகக் கூறினார்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அக்காலம் முதல் எல். ரி.ரி. ஈ. யினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருபவர் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் தகவல் ஊடகத்துறையமைச்சில் நடைபெற்றது.

இதன்போது கத்தோலிக்க ஆயர் பேரவை வடமாகாணத்தில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வியெழுப்பிய போது அதற்கு பதிலளிக்குமுகமாகவே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு கூறினார்.

ஆயர் வண. இராயப்பு ஜோசப் எல். ரி. ரி. ஈ. யினர் சார்பாக குரல் கொடுப்பவர். மோதல் இடம்பெற்ற காலத்தில் எமது படையினர் மடுவை நோக்கி படையெடுத்த போது மடு மாதாவின் சிலையை பாதுகாக்கும் நோக்கில் அவர் எல். ரி. ரி. ஈ. யினரிடம் ஒப்படைத்திருந்தார்.

அவர் நினைத்திருந்தால் அதனை படையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்திருக்கலாம் தானே? எல். ரி. ரி. ஈ. யினர் மடு மாதாவின் சிலையை சுமார் 40 கிலோ மீற்றருக்கு அப்பால் கொண்டு சேர்த்திருந்தனர்.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் அவர் எல். ரி. ரி. ஈ. ஆதரவாளர் என்பது எனது அபிப்பிராயம் என அமைச்சர் கூறினார்.

எமது நாட்டிற்கென ஒரு அரசியல் யாப்பு உண்டு. பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் நாம் ஒவ்வொருவரும் அரசியலமைப்பின்படி ஒழுகுவதாகவே நாம் வாக்குறுதி அளித்துள்ளோம்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரமே வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுமே தவிர அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பை மீறி செயற்படுத்த மாட்டாது என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் அனைத்து தரப்பினரினதும் கருத்துக்களையும் யோசனைகளையும் வரவேற்கும் அதேசமயம் நாட்டின் அரசியலமைப்புக்கு பொருந்தக் கூடியனவற்றை மாத்திரமே செயற்படுத்தும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.