திருமணத்தில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக இளைஞர் அடித்துக்கொலை : துடிதுடித்து இறந்த சோகம்!!

260

உத்ரகாண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர், மர்ம கும்பலால் விரட்டி விரட்டி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர தாஸ் (26) என்கிற இளைஞர் தன்னுடைய மாமா எலம் தாஸ் மற்றும் நண்பர்கள் சிலருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு எலம் தாஸ் உள்ளிட்ட நண்பர்கள் சிலர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது, ஜிதேந்திர தாஸ் மட்டும் தன்னுடைய நண்பர் ஒருவருடன் திருமண விருந்தில் இரவு உணவு சாப்பிட சென்றிருக்கின்றார்.

அங்கு நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, அதனை பொறுக்க முடியாத உயர்ந்த வகுப்பை சேர்ந்த சிலர், தாஸ் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை கீழே தள்ளியுள்ளனர். நாற்காலியை ஓங்கி மிதித்து தாஸை கீழே விழ வைத்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட சரமாரி தாக்குதலில் இருந்து தப்பி, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் விரட்டி விரட்டி கொடூரமாக அடித்துள்ளது. வலியுடன் துடிதுடித்து போன அந்த இளைஞர் ஒரு வழியாக தப்பி வீடு சேர்ந்துள்ளார்.

வீட்டிற்குள் நுழையாமல், நடந்தவை பற்றி தன்னுடைய தாயிடம் கூட கூறாமல் வாசலிலே படுத்துறங்கியுள்ளார். மறுநாள் காலை சுயநினைவிழந்து வாசலில் மகன் கிடப்பதை பார்த்த தாய், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.