வவுனியா நகரசபையின் விசேட அமர்வு : குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

570

வவுனியா நகரசபையின் விசேட அமர்வு இன்று (08.05) நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நான்கு பேர் பணியின்போது மரணித்திருந்த நிலையில் அவர்களின் குடும்பங்களுக்க நிதியுதவி வழங்குவதற்கான விசேட கூட்டம் நடைபெற்றிருந்தது.

இவ் விசேட அமர்வில் மரணமாக சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு தற்காலிகமாக தலா ஒன்றரை இலட்சம் ரூபா நகரசபையால் வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டதுடன், நகரசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் நிதி திரட்டி பாதிக்கப்ட்ட குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நகரசபை உறுப்பினர் சேனாதிராஜா பணியின் போது மரணித்த சுகாதாரத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதே நேரம் அவர்களுடைய மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை ஒன்று மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நகரசபை தவிசாளர் இ.கௌதமன் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார்.

நகரசபை விசேட அமர்வில் உரையாற்றிய நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) பணியின் போது இறந்த நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்க கூடிய வகையில் சபை பரீசிலிக்க வேண்டும் வர்த்தமானியிலும் அவ்வாறான ஒரு சரத்து இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

பணியின் போது மரணித்த சுகாதாரத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நகரசபை உறுப்பினர் பாலசிங்கம் பிரசன்னா முன்வைத்திருந்ததுடன் அதற்கான முயற்சியை சபை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கு சபையில் உறுப்பினர்களால் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.