யாழ்.வைத்தியசாலையில் அனைத்து துறையினரும் பணிப் புறக்கணிப்பு!!(படங்கள்)

633

யாழ். போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்தி வரும் தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஆறாவது நாளாக தொடரும் யாழ்.வைத்தியசாலைத் தொண்டர்களின் போராட்டத்தில், அங்கு பணி புரியும் மருத்துவர்கள், தாதியர்கள், நிறைவு காண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்கள், சிற்றூழியர்கள், சாரதிகள், மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் என அனைவரும் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

சிற்றூழியர்களும், நிறைவு காண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்களும் காலை 9 மணிமுதல் 10 மணிவரையும் ஏனையோர் 11 மணிமுதல் 12 மணிவரையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் பல நெருக்கடியான சூழ்நிலையில் எமக்கு உதவியாக செயற்பட்டவர்கள். இவர்கள் நாளொன்றுக்கு 175 ரூபாய் என்ற குறைந்த ஊழியத்திற்கு பணி புரிந்துள்ளார்கள். தாம் வாங்கும் ஊதியத்திற்கு மேலாக பணியாற்றியவர்கள்.

அப்போற்பட்டவர்களுக்கு கல்வித்தகமை இல்லை என்ற காரணத்தை காட்டி அவர்களுக்கு நியமனம் வழங்காமல் விடாது, அவர்கள் சேவையை கருத்தில் கொண்டு விஷேட ஏற்பாட்டின் கீழ் இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரியே இன்றைய தினம் வைத்தியசாலையில் பணிபுரியும் அனைவரும் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

இதேவேளை நாளையும் எமக்கான தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் தெரிவித்தனர்.

11 12 13 14