வவுனியாவை சேர்ந்த ஒருவர் ஒரு கோடி ரூபா கப்பம் கேட்டு கடத்தப்பட்டு நெடுந்தீவில் தடுத்து வைப்பு!!

933

kidnapவவுனியாவை சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தடுத்து வைத்து பிரான்ஸில் இருக்கும் அவரது மகனிடம் ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயற்சித்த வடக்கில் செயற்பட்டு வரும் அரசியல் குழுவை சேர்ந்த சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா குருக்கள்புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த மார்கண்டு ஶ்ரீஸ்கந்தராஜா என்ற 56 வயதான நபரை கடத்திச் சென்று இவர்கள் இவ்வாறு கப்பம் பெற முயற்சித்துள்ளதாக வவுனியா மற்றும் மன்னாருக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார்.

கடந்த 13 ம் திகதி மார்க்கண்டு சிறிஸ்கந்தராஜாவின் வீட்டுக்கு சென்ற குழுவினர் குடும்பத்தினரின் விபரங்களை கேட்டு எழுதிக்கொண்டு தண்ணீர் பம்பு ஒன்றை தருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை பெற்றுக்கொள்வதற்காக 14 ஆம் திகதி வவுனியா நகருக்கு வருமாறு அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் சிறிஸ்கந்தராஜா 14 ஆம் திகதி வவுனியா நகருக்கு சென்ற போது அங்கு வான் ஒன்றில் வந்த பொருட்களை வழங்கும் அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்கள் எனக் காட்டிக் கொண்ட நபர்கள், பொருட்கள் கிளிநொச்சியில் வழங்கப்படுவதாக கூறி அவரை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் கிளிநொச்சிக்கு அழைத்து சென்ற அவர்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் நெடுந்தீவில் இருப்பதாக சிறிஸ்கந்தராஜாவை அங்கு அழைத்துச் சென்று இவ்வாறு தடுத்து வைத்து கப்பம் கோரியுள்ளனர்.

சிறிஸ்கந்தராஜாவின் மகன் பிரான்ஸில் விபத்துக்குள்ளாகி உடல் ஊனமுற்றிருப்பதாகவும் இதற்கான அவருக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு கிடைக்க உள்ளதாகவும் இந்த பணத்தை பெறுவதற்காகவே அவரை சந்தேக நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல் சம்பவத்திற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள சிலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

சில தினங்கள் நெடுந்தீவில் ஒரு வீட்டில் சிக்கியிருந்த சிறிஸ்கந்தராஜா அவரது பாதுகாப்பு நிறுத்தப்பட்டிருந்த இளைஞர்களிடம் நட்புறவாக பழகி நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து வெளியேறி படகு மூலம் பருத்தித்துறைக்கு வந்து அங்கிருந்து பஸ்ஸில் ஏறி வவுனியாவுக்கு தப்பி வந்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வானை கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.