வடக்கில் பொலிஸ் சேவையில் மொழி பிரச்சினை குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : அஜித் ரோஹண!!

1108

Ajith Rohanaவடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது மொழி பிரச்சினை ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அந்தந்த மாகாண மக்களின் மொழி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2008 ம் ஆண்டு தொடக்கம் இதுவரை 892 தமிழ் பொலிஸ் அதிகாரிகள் அங்கு பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வடக்கு-கிழக்கில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மொழி மூலம் பொலிஸ் நிலையங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 240 உதவி பொலிஸ் அதிகாரிகள் நேற்று களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

மக்களுக்கு சிறந்த சேவையற்றுவதற்கு மொழி தடையாக அமைவது யுத்தம் முடிவதற்கு முன்னரே இனங்காணப்பட்டது. இந்நிலையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் கூடுதலாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் நியமிக்கப்பட்டனர்.

இப்போது வடக்கு கிழக்கில் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதியப்படுகின்றன இது பெரிய சாதனையாகும். இன்னும் 5 வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் சிங்களத்துடன் தமிழிலும் கருமங்களை ஆற்றும் வசதிகளை ஏற்படுத்தும் இலக்கை நோக்கி செயற்படுகின்றோம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.

தமிழ் பேசும் 240 பொலிஸ்காரர்களுக்கு செவ்வாயன்று புதிதாக சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவார்கள் என அவர் கூறினார்.