ஓடிவந்து பேசிய சிறுவர்களின் உடல்கள் சிதறுண்ட நிலையில் : கண்ணீர் மல்க சம்பவத்தை நேரில் கண்ட அருட்தந்தை!!

237

சிறுவர்களின் உடல்கள் சிதறுண்ட நிலையில்..

“புத்தாடைகள் அணிந்து மலர்ந்த முகத்துடன் ஓடிவந்து பேசிய சிறுவர்களின் உடல்கள் சிதறுண்ட நிலையில் கிடப்பதை கண்ட போது…” என கொழும்பு கொச்சிக்கடை தற்கொலை குண்டுத் தாக்குதலை நேரில் கண்ட அருட்தந்தை ஜேய் மரியரட்ணம் கண்களில் நீருடன் சம்பவத்தை விபரிக்கிறார்.

கொழும்பு சொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற்ற போது அருட்தந்தை ஜேய் மரியரட்ணம் திருப்பலி பூசையை ஒப்புக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது தனது மனநிலை எப்படியிருந்தது என்பது தொடர்பில் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – இந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற வேளையில் உங்களுடைய தலைமையிலேயே திருநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இத்தருணத்தில் அதிசயிக்கத்தக்க விதமாக கடவுளின் கிருபையால் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள். ஆயினும், இத்தகைய ஆபத்தை கடந்து வந்துள்ள தங்களது மனநிலை எவ்வாறாக உள்ளது?

பதில் – (கண்களில் கண்ணீர் மல்கியவராய்) திருப்பலி ஆரம்பமாவதற்கு முன் ஆலயத்தின் நுழைவாயிலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பே சென்று அங்கு கூடியிருந்த மக்களுடன் குறிப்பாக பல சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினேன்.

அழகான புத்தாடைகள் அணிந்து கள்ளங்கபடமற்ற மலர்ந்த முகத்துடன் ஓடி வந்து என்னுடன் பேசியதையும் பின்பு அவர்களின் சிதறுண்ட உடல்களுடன் கிடப்பதையும் கண்ட என் மனநிலையை விபரிக்க வார்த்தைகளே இல்லை. அச்சம்பவம் நினைவில் வரும் போதேல்லாம் என் கண்கள் குளமாகின்றன.

அந்த தருணத்தில் எவரும் எதிர்பாராத வண்ணம் ஏற்பட்ட இத்தகைய பாரிய குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட இழப்புக்களோ ஏராளம். இறை சந்நிதானத்தில் கூடியிருந்த பக்தர்களின் உடல்கள் சிதறுண்ட காட்சிகளை கண்ணுற்ற போது செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றேன்.

சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என இரத்த வெள்ளத்தில் மிதந்த தருணங்கள் என் மனக்கண்முன் வந்து செல்கின்றன. மரணஓலத்திலும் கூட அந்தோனியாரே! என அவலக்குரல் எழுப்பிய பக்தர்களின் சத்தம் என் செவிகளில் ஒலித்த வண்ணமே உள்ளது. இதனை என்றுமே என் வாழ்நாளில் மறக்க முடியாது.

இத்தகைய செயலை புரிந்தவர்கள் மேல் கடும் சினம் ஏற்பட்டது. ஏனெனில் மன அமைதியை தேடி மக்கள் கூடும் இறை சந்நிதானத்தில் இத்தகைய இழிச்செயலை புரிந்தமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இருப்பினும் கத்தோலிக்க குருவாக அருட்பணியாற்றும் நிலையில் குருத்துவத்தின் மேன்மையின் மகத்துவத்தையும், திருவிவிலியத்தின் படிப்பினைகளுக்கும் கட்டுப்பட்ட ஒருவராக சகிப்புத் தன்மையுடன் செயற்பட வேண்டியவராக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் அருட்தந்தை ஜேய் மரியரட்ணம்.

-தமிழ்வின்-