பொதுமக்கள் சிரமம்

வவுனியா நகரசபையினால் முதலாம் குறுக்கு தெரு வீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் வடிகால் அமைக்கும் பணியினால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நகரசபையினால் ஒதுக்கப்பட்ட நிதியில் வவுனியா முதலாம் குறுக்கு தெரு வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வடிகால் அமைக்கும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடிகால் அமைப்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக குழி தோண்டப்பட்டுள்ளது. இன்றுடன் பத்து நாட்கள் கடந்துள்ள நிலையிலும் குறித்த குழியினை தாண்டி வர்த்தக நிலையங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ செல்ல முடியாத நிலையில் பொதுமக்களும் வர்த்தகர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு விரைவாக வடிகால் அமைக்கும் பணியினை பூர்த்தி செய்து தருமாறும் வாடிகால் அமைக்கும் பணி நிறைவுறும் வரை மாற்று ஏற்பாடொன்றினை மேற்கொள்ளுமாறும் வர்த்தகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து நகரசபை உப நகரபிதா சு. குமாரசாமியிடம் கேட்டபோது, அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள் பலர் இம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர். கால்வாய்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட ஒப்பந்த தாரர்களிடம் இவ்விடயம் குறித்து பணிக்கப்பட்டுள்ளது அவர்களே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.





