அன்று திருமணத்தினால் படிப்பை விட்ட தாய்… இன்று அவர் சாதித்தது என்ன? குவியும் வாழ்த்து!!

661

இந்தியாவில் தன் மகனுடன் சேர்ந்து 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 36 வயது தாய் தேர்ச்சி பெற்றிருப்பதால், அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி முதுலி. 36 வயதாகும் இவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதால், பசந்தி தன் படிப்பை அப்போது கைவிட்டுள்ளார்.

இதனால் பசந்தியின் படிப்பு அத்தோடு தடைபட்டது. குழந்தைகள் பிறந்தாலும் கூட பசந்திக்கு 10-ஆம் வகுப்பை முழுமையாக முடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துள்ளது.

இந்நிலையில் தான் அவருடைய மகன் 10-ஆம் வகுப்பிற்கு சென்றதால், மகனுடன் சேர்ந்து தானும் படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது.

அதன் படி மகனும் அவருக்கு உதவியுள்ளார். அதாவது பள்ளியில் என்ன சொல்லி கொடுக்கிறார்களோ அதை அப்படியே வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு சொல்லி கொடுத்து வந்துள்ளார். இதனால் பசந்தி மற்றும் அவரது மகன் என இருவருமே 10-ஆம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பசந்திக்கு 203 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அவரது மகன் 340 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த பசந்தி, மகிழ்ச்சியில் கண்கலங்கினார். இனி வேலையிலும் பதவி உயர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பசந்தியின் வெற்றி குறித்து அவரது கணவர் கூறும்போது, அவரது மனைவி மேற்கொண்டு படிப்பை தொடர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.