பிரசவ வலியால் துடித்த இளம்பெண்… மருத்துவருக்காக காத்திருந்த அவலம் : இறுதியில் ஏற்பட்ட துயரம்!!

269

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண் ஒருவர் மருத்துவருக்காக 4 மணி நேரம் காத்திருந்த அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த சமீனா என்பவர், பிரசவத்திற்காக கோலாரில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தனது கணவர் ரியாஸ் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார்.

பிரசவவலியால் துடித்த சமீனாவை காலியாக இருந்த அந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் அப்படியே தரையில் கிடத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் அப்போது மருத்துவர்கள், ஊழியர்கள் யாரும் இல்லாததால் அவர்களின் வருகைக்காக சுமார் 4 மணி நேரமாக சமீனா வலியுடன் போராடிக்கொண்டிருந்தார்.

நேரம் செல்லச் செல்ல பிரசவ வலியை அவரால் தாங்கிக்கொள்ள முடியாததால், அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

பிரசவவலி ஏற்பட்டு தாமதமாக வந்ததால், சமீனாவை காப்பாற்ற முயற்சி செய்கிறோம், குழந்தையைக் காப்பாற்ற இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தொடர்ந்து நடந்த சிகிச்சையில் சமீனாவை மட்டுமே காப்பாற்றியுள்ளனர், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்.

இச்சம்பவம் சமூகவலைத்தளம் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததும், கோலார் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முனிசாமி,

தனியார் மருத்துவமனைக்குச் சென்று சமீனாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இச்சம்பவம் தொடர்பாக சம்பத்தப்பட்ட மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீனாவின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.