தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் ஏற்காதவர்கள் நாட்டில் இருக்க உரிமையில்லை : ஜாதிக ஹெல உறுமய!!

1148

Hela_CIதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் தேசிய கீதத்தை பாட முடியாது என சவால் விடுத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்று அதன் முன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேசிய கீதத்தை பாடமுடியாது என சவால் விடுத்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி மக்களின் இறைமையை பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பொறுப்பு.

நாட்டின் அரசியல் அமைப்பு, நாட்டின் தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அப்படியான நபர்கள் நாட்டுக்குள் வாழ உரிமை கிடையாது. அத்துடன் நாடாளுமன்றம் மற்றும் ஏனைய மக்கள் சபைகளில் அங்கம் வகிக்க உரிமையில்லை.

தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது என்றால் தமக்கு தேசிய கீதம் தேவையில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்து அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல பாரதூரமான சட்டவிரோதமான பேச்சு.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் நாட்டின் தேசியக் கொடி சிங்கக் கொடி எனவும் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாத எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் அமைப்பில் இருக்கும் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அப்படியான நபர்கள் நாட்டில் இருப்பதற்கு உரிமையில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.