ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கும், வழக்குகளுக்கும் என்றுமே முடிவு இருக்காது போலும். மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கி வெளிவந்த இவருக்கு குடிபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை பலியாக்கிய வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
தற்போது மீண்டும் அவர்மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்துறை இன்று அறிவித்துள்ளது. இந்த முறை முஸ்லிம்களின் மத உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் சல்மான்கான் கலந்துகொண்ட பிக் பாஸ் தயாரிப்பளர்களின் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சல்மான் சொர்க்கத்தையும், நரகத்தையும் சித்தரித்தவிதம் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகள் புண்படும்விதத்தில் இருந்ததாக முகமது பசிஹுதின் என்பவர் புகார் செய்துள்ளார்.
மதத்தை அவமதித்ததற்காக சல்மான் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது இந்தியன் பீனல் 295 ஆவது பிரிவின் கீழ் பழைய ஹைதராபாத் நகரில் உள்ள பாலக்னுமா காவல்துறையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடவடிக்கைகள் எடுக்கும்முன் இந்த குற்றச்சாட்டு தொடர்பான சட்ட கருத்துகளையும் அறிய முயன்றுவருவதாக போலீஸ் கமிஷனர் அனுராக் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.





