நடிகர் விஷால் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தின் படப்பிடிப்பு விரைந்து நடைபெற்று வருகின்றது. திருவின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் பாடல் காட்சிக்காக மகாபலிபுரம் பகுதியில் கடலின் பின்னணியில் புதிய தேவாலயம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.
பருத்தி வீரன், ஆடுகளம் போன்ற படங்களில் பணிபுரிந்த கலை இயக்குனர் ஜக்கியின் குழுவினர் ஐந்து நாட்களில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான செட் ஒன்றினைப் போட்டுள்ளனர்.
கிறிஸ்துமசிற்கு சில தினங்கள் முன்னதாக புதிதாக உருவாகியுள்ள இந்த தேவாலயத்தைப் பார்த்து உள்ளூர் மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் திரு தெரிவித்துள்ளார். கருப்பு, வெள்ளை, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களைக் குறிக்கும் பாடல்காட்சி ஒன்றினை இந்தப் படத்திற்காகப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
படத்தில் முக்கியத்துவம் பெறும் இந்த வண்ணங்களில் வெண்மையைக் குறிப்பதற்காக இந்த தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்றே மற்ற வண்ணங்களுக்குரிய காட்சிகளும் அந்தந்த வண்ணங்களின் இயற்கைப் பின்னணியில் எடுக்கப்பட உள்ளன.
வரும் 25ஆம் திகதிக்குள் இந்த இடத்தில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டிருந்தாலும் இந்த தேவாலயத்தினை அப்படியே சில காலம் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்தார்.
இங்கு எடுக்கப்படவிருக்கும் ஏலேலோ என்ற பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துப் பாடியுள்ளார். இதற்கான நடனக்காட்சியை ஷோபி அமைத்துள்ளார். 250 துணை நடனக் கலைஞர்களுடன் நடிகர் விஷால், சுந்தர் ராமு மற்றும் ஜகன் ஆகியோர் இந்தப் பாடல் காட்சியில் இடம் பெற உள்ளனர் என்று தயாரிப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.





