மகனின் முதல் பிறந்தநாளுக்கு ஹெலிகொப்டரில் இருந்து மலர் தூவிய தொழிலதிபர் : இன்ப அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!

343

ஹெலிகொப்டரில் இருந்து மலர் தூவிய தொழிலதிபர்

தமிழகத்தில் தொழிலதிபர் ஒருவர், தனது மகனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ்(50). கொற்கையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளைக் கொண்டு, இவர் பால் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார்.

மேலும், சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் இவர் வைத்துள்ளார். மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று, ஹெலிகாப்டர் இறங்கும் தளமும் கணேஷ் அமைத்துள்ளார். இவரது மனைவி அகிலா. நீண்டகாலமாக இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தவமிருந்து பிறந்த குழந்தை என்பதால், அவனது முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, தங்களது முக்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்த கணேஷ், ஸ்ரீநகர் காலனி அருகே மண்டபம் ஒன்றில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார். அப்போது திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து வந்து, கணேஷின் மகன் அர்ஜூன் மற்றும் விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் மீது மலர்களைத் தூவியது.

திடீரென மலர்கள் தூவப்பட்டதால் அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறப்பதைக் கண்டு குழப்பமடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, தங்களது சொந்த ஹெலிகாப்டர் மூலம் தனது மகனின் பிறந்தநாளுக்காக மலர் தூவ ஏற்பாடு செய்ததும், அதற்காக கணேஷ் உட்பட அவரது உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி வாங்கியதும் தெரிய வந்தது. இதனை கும்பகோணம் வருவாய் கோட்டாச்சியர் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்தார்.