தந்தையை கொலை செய்து நாடகமாடிய இளைஞர் : நண்பரை கொன்றதால் பொலிசில் சிக்கினார்!!

513

தந்தையை கொலை செய்த  இளைஞர்

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தையின் சொத்துகளை அடைவதற்காக அவரையே கொலை செய்துவிட்டு நாடமாடிய இளைஞர் நீண்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் கைதாகியுள்ளார். குறித்த கொலை தொடர்பில் உடந்தையாக இருந்த நண்பன் மாயமான வழக்கு கேரள மாநிலத்தில் நடைபெற்று வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரையூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஷாஜி. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணன் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிருஷ்ணன் மாயமானதாக கூறி பொலிசார் விசாரித்து வந்துள்ளனர். ஆனால் கேரள மாநில எல்லையில் கிருஷ்ணனின் உடல் மீட்கப்பட்டதை அடுத்து, கொலைகாரனை பிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வந்தனர்.

இதனிடையே, கிருஷ்ணனின் மகன் ஷாஜி தமது குடும்ப சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு கேரள மாநிலத்தில் குடியேறியுள்ளார். இந்த நிலையில், ஷாஜியின் நண்பர் வினு திடீரென்று மாயமானார். இந்த வழக்கு விசாரணையில், வினு ஷாஜியுடன் கடைசியாக சென்றது உறுதியானது.

மேலும், ஷாஜியை கண்காணித்த பொலிசார், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பது பொலிசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கேரள பொலிசார் கன்னியாகுமரி மாவட்டம் சென்று ஷாஜியை கைது செய்துள்ளனர். ஷாஜியிடன் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் பொலிசாருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஷாஜியின் தந்தை கிருஷ்ணனுக்கு அசையும் மற்று அசையாச் சொத்துகள் பல லட்சம் மதிப்பில் இருந்துள்ளன. இதனால் ஷாஜி பொறுப்பே இல்லாமல், நண்பர்களுடன் கும்மாளமிட்டபடி வாழ்ந்து வந்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், சொத்துகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைத்துவிடுவதாக ஷாஜியை மிரட்டியுள்ளார். சொத்துகள் கைவிட்டு போய்விடுமோ என்ற எண்ணத்தில், நண்பர்கள் ஐவருடன் இணைந்து ஷாஜி, சொந்த தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார்.

மேலும் சடலத்தை கேரள எல்லையில் கொண்டு சென்று வீசியுள்ளார். இதனால் இந்த வழக்கு பொலிசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, ஷாஜியின் நண்பர் வினு, நடந்தவற்றை பொலிசாரிடம் கூறிவிடுவேன் என மிரட்டி, அவ்வப்போது பணம் பறிக்கத் தொடங்கினார்.

இது ஒருகட்டத்தில் எல்லை மீறவே, பணம் தருவதாக கூறி வினுவை குடியிருப்புக்கு அழைத்த ஷாஜி, மது விருந்து அளித்து, தமது நண்பர் அனியுடன் இணைந்து வினுவை கொலை செய்துள்ளார். தற்போது இந்த வழக்கு தொடர்பில் ஷாஜி, அவரது நண்பர் அனி ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் மாயமான இளைஞரின் வழக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளாக மர்மமாக இருந்த கிருஷ்ணன் கொலை வழக்கில் தீர்வைத் தந்துள்ளது.