மார்பக புற்றுநோய் என நினைத்து அளிக்கப்பட்ட கீமோ சிகிச்சை : அதிர்வலையை ஏற்படுத்திய விவகாரம்!!

652

கீமோ சிகிச்சை

கேரளாவில் மார்பக புற்றுநோய் இல்லாத பெண்ணுக்கு கீமோ சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் பாதிப்புக்கு உள்ளான நிலையில் இதில் தொடர்புடைய ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ரஜனி. இவருக்கு மார்பகத்தில் கட்டி இருப்பதாக தெரியவந்த நிலையில், அது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

நோயை உறுதிசெய்வதற்காகத் திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கும், தனியார் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் முடிவு வர தாமதமான சூழலில் தனியார் ஆய்வகம் அளித்த முடிவில் அது புற்றுநோய் கட்டி எனத் தெரிவிக்கப்பட்டது.

உடனே மருத்துவர்களும் ரஜனிக்கு புற்றுநோய்க்கான முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையில் வழங்கப்படும் மருந்துகளின் வீரியத்தால் தலைமுடி அனைத்தும் உதிர்தல், வாந்தி, உடல் பலவீனம் போன்ற பல பக்கவிளைவுகள் ஏற்பட்டன.

இந்நிலையில் இரண்டாம் கட்ட சிகிச்சைக்கான நாள் குறித்த சமயத்தில் அரசு மருத்துவமனை ஆய்வக முடிவு வந்தது. அதில் ரஞ்சனியின் மார்பகத்திலிருந்தது புற்றுநோய் கட்டி இல்லை என கூறப்பட்டதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் நிறுத்தப்பட்டது.

பின்னர் ரஜனிக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவித்த தனியார் ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனியார் ஆய்வகம் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ரீதியான வாய்ப்பு இல்லை என்று கேரள சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதாவது தனியார் ஆய்வகத்திற்குப் பெண்ணின் திசுக்களை அனுப்பியது மருத்துவ கல்லூரியின் தவறு என கூறப்பட்டுள்ளது. மேலும் கிளினிக்கல் எஸ்டாபிலிஷ்மென்ட் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தான் இது தொடர்பான நடவடிக்கை சாத்தியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.