சட்டவிரோதமாக வீடு வாங்கிய தேவ்யானி : மீண்டுமொரு சர்ச்சை!!

568

Devமும்பையில் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் குடியிருப்பில் இந்திய துணை தூதர் தேவ்யானி சட்டவிரோதமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரியவந்து உள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவ்யானி கோப்ரகடே விசா மோசடி புகாரில் அந்த நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை பொலிசார் கைவிலங்கு போட்டு அழைத்து சென்று, ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த செயலுக்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது. இந்த நிலையில் தேவயானி மும்பையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடு வாங்கி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குடியிருப்பு ஊழல் தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கையை நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் மாராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தாக்கல் செய்தார்.

அதில் முன்னாள் முதல்வர் அசோக் சவான், மறைந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

இந்த குடியிருப்பில் 25 வீடுகள் தகுதியில்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது. அதில் ஒருவர் தான் தேவ்யானி ஆவார்.

மகராஷ்டிரா அரசின் விதிமுறைப்படி அரசு ஊழியர் ஒருவர் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வீடு பெற வேண்டும் என்றால், அவருக்கு சொந்தமாக வேறு வீடு எதுவும் இருக்க கூடாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தேவ்யானிக்கு ஓசிவாரா பகுதியில் ஏற்கனவே குடியிருப்பில் வீடு உள்ளது.

இந்த வீட்டை அரசு ஒதுக்கீட்டின் கீழ் தான் அவர் பெற்று இருந்தார். இந்த நிலையில் உண்மையை மறைத்து ஆதர்ஷ் குடியிருப்பிலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அவர் வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.