யாழில் ஒரு வாரத்தில் 16 கொள்ளை சம்பவங்கள், 47 இலட்சத்துக்கு மேல் மோசடி!!

843

Jaffnaயாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இடம்பெற்ற 16 கொள்ளை மற்றும் மோசடிச் சம்பவங்களில் சுமார் 47 இலட்சத்து 66 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதுடன், சட்டம் ஒழுங்கு தொடர்பான அச்ச நிலையும் தோன்றியுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரோ இது தொடர்பாக எவரையும் கைது செய்ய முடியவில்லை எனக் கூறியதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி சமாளிக்கின்றனர்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற களவு, கொள்ளை, மோசடிச் சம்டபவங்கள் தொடர்பாக புள்ளிவிபரங்களை யாழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா வெளியிட்டார்.

இடைமறித்த பத்திரிகையாளர்கள் இவ்வளவு களவு, கொள்ளை, மேசடிச் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறீர்கள். இது தொடர்பில் யாராவது கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எனக் கேட்டனர். அதற்கு இல்லை என்ற பதிலே அவரிடம் இருந்து கிடைத்தது.

யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களில் வியாபாரம் தொடர்பாக பணத்திற்குப் பதிலாக காசோலை கொடுத்து மோசடி செய்தமை, வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்தமை தொடர்பாக 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி 5 சம்பவங்களிலும் 35 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று வீடு, வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை, வீட்டிற்குள் புகுந்து திருட்டு, வழிப்பறி போன்ற 11 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படிச் சம்பவங்களில் 12 இலட்சத்து 16 ஆயிரத்து 900 ரூபா பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.