3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து பாடசாலைக்கும் வவுனியாவிற்கும் பெருமை சேர்த்த மாணவி!!

763

Riyanthiniவெளியாகியுள்ள க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலய மாணவி கணேசநாதன் றியாந்தினி  3A சித்திகளைப் பெற்று (தமிழ்- A, இந்து நாகரீகம் -A, புவியியல் – A) வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 48ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் வாரிக்குட்டியூர் 4ம் யூனிற்றை சேர்ந்த கணேசநாதன் இந்துமதி அவர்களின் புதல்வியாவார். இவரது தயார் கணேசபுரம் விநாயகர் வித்தியாலய ஆசிரியராவார்.

19 வருடங்களுக்கு முன்னர் பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலய மாணவர் ஒருவர் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பிடித்திருந்தார். தற்போது 19 வருடங்களின் பின்னர் கணேசநாதன் றியாந்தினி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து வவுனியா நெற் இணையம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது..

எனது இந்த வெற்றியின் பின் பலரது கடின உழைப்பும் உதவியும் அடங்கியுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

முதலில் அனைத்து சக்தியையும் எனக்களித்த இறைவனுக்கும் என் பெற்றோருக்கும் என் சகோதரர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் எமது பாடசாலை அதிபர் திரு.ஜேசுதாசன், இந்து நாகரீக ஆசிரியர் திரு.மயூரன், தமிழ் ஆசிரியர் திருமதி.நிசாந்தி, புவியியல் ஆசிரியர் திரு.சசிதரன் ஆகியோருக்கும் வவுனியா சயன்ஸ் ஹோல் (Science Hall) ஆசிரியர் திரு.ஸ்ரீதரன்( புவியியல் ஆசிரியர்- பூவரசங்குளம் மகா வித்தியாலயம்) , எப்போதும் என்னுடன் இருந்து பாடங்களை சொல்லித்தந்த  என் அக்கா துஷ்யந்தினி ( யாழ். பல்கலைக்கழக மாணவி) ஆகியோருக்கும் என் நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவர்கள் அனைவரினதும் வழிகாட்டுதலுடனும் உதவியுடனுமே என்னால் சாதிக்க முடிந்தது.

எதிர்காலத்தில் ஒரு சட்டத்தரணியாக வருவதுவே எனது இலட்சியமாக இருந்தது. ஆனால் ஆங்கிலப் பாடத்தில் சாதாரண சித்தியை(S) பெற்ற காரணத்தினால் என் கனவு நிறைவேறாமல் போனதையிட்டு கவலையிடைகின்றேன். எங்கள் பாடசாலை பின்தங்கிய பாடசாலை என்பதால் வசதிகள் மிகவும் குறைவு. சரியான ஆங்கில ஆசிரியர் இல்லாத காரணத்தினால் என்னால் சாதாரண சித்தியையே பெறமுடிந்தது இதனால் என் கனவும் கைகூடாமல் போய்விட்டது என மனவருத்தத்துடன் தெரிவித்தார்.

பின்தங்கிய வசதிகள் குறைந்த பாடசாலையில் கல்விகற்று, ரியூசன் வகுப்புகளிற்கு செல்லாது 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த கணேசநாதன் றியாந்தினி அவர்களிற்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.