முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் அகடமி உட்பட மொத்தம் 13 பயிற்சி மையங்களுக்கு, பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது.
கோல்கத்தாவில் பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி) சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் ஜூனியர் (17 வயது) மற்றும் சப்-ஜூனியர் (14 வயது) அம்பர் ராய் கிரிக்கெட் தொடர் நடந்தது.
இதில் முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி, முன்னாள் பெங்கால் அணித்தலைவர் சம்பரன் பானர்ஜி உள்ளிட்டோரின் கிரிக்கெட் அகடமிகள் பங்கேற்றன.
இத்தொடரில் பங்கேற்ற 13 கிரிக்கெட் அகடமிகளின் வீரர்கள் வயதில் மோசடி நடந்திருப்பதை சி.ஏ.பி. கண்டுபிடித்தது. இதில் கங்குலி, சம்பரன் பானர்ஜி ஆகியோரின் கிரிக்கெட் அகடமிகளும் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து கங்குலி உள்ளிட்டோரின் 13 கிரிக்கெட் அகடமிகளுக்கும் ஒரு ஆண்டு தடை விதித்தது. தவிர, வயதில் மோசடி செய்து விளையாடிய 42 வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன.
இதுகுறித்து சி.ஏ.பி.,யின் இணை செயலாளர் சுபிர் கங்குலி கூறுகையில், இது போன்ற மோசடி மீண்டும் கண்டுபிடிக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட கிரிக்கெட் அகடமிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் வீரர்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கங்குலி கிரிக்கெட் அகடமி நிர்வாகி ஒருவர் கூறுகையில், வீரர்களின் வயது சான்றிதழ்களை சி.ஏ.பி. சரிபார்க்கும் என நினைத்துவிட்டோம். இது போன்ற தவறுகள் வரும் காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்வோம். விரைவில் வீரர்களின் வயது சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் மூலம் சரிபார்ப்போம் என்று கூறியுள்ளார்.





