மனைவியின் சடலத்துடன் பல மணி நேரம் வீதியில் உட்கார்ந்திருந்த கணவன் : கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்!!

703

தமிழகத்தில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து பெண்ணின் கணவர் மனைவி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்திய கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது

கோவை தடாகம் ரோடு கணுவாய் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். மருத்துவர். இவரது மனைவி ஷோபனா (46). இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

தினமும் ஷோபனா அவரது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதும், பள்ளி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம்.

இந்தநிலையில், நேற்று மாலை வழக்கம் போல் ஷோபனா தனது மகளை பள்ளியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

இவர்களது வாகனம் ஜம்புகண்டி அரசு பள்ளி அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி, அசோகன் ஆகிய வாலிபர்கள் ஷோபனா வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் ஷோபனா பரிதாபமாக பலியானார். அவரது மகள் படுகாயமடைந்தார்.

மேலும், இரு வாலிபர்களும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்திருக்கின்றனர். மூவரும் மது போதையில் இருந்திருக்கின்றனர். இதனை அறிந்த ரமேஷ், மனைவியின் உடலுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த விபத்திற்கு காரணமான டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மலைவாழ் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை ஐந்தரை மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 11 மணி வரை தொடர்ந்தது. பெண்கள் உள்பட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை – கேரளா இடையேயான சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்து வந்த காவல் துறையினரின் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், டாஸ்மாக் கடை மூடப்படும் வரை ஷோபனாவின் உடலை எடுக்க அனுமதிக்கமாட்டோம் என ரமேஷுடன் சேர்ந்து பொதுமக்களும் திட்டவட்டமாக கூறினர்.

பொதுமக்கள் தீவிரமாக போராடியதை அடுத்து வட்டாட்சியர் விஜயகுமார் நிகழ்விடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து ஜம்புகண்டி பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடுவதாகவும், நிரந்தரமாக கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியர் விஜயகுமார் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்.