புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடந்த அதிசயம் : கண்களை திறந்து மூடி கண்ணீர்விட்ட மாதா?

813

தேவாலயத்தில் நடந்த அதிசயம்

320 ஆண்டுகள் பழமையான திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் மாதா சிலையின் கண்கள் திறந்து மூடியுள்ளதாகவும், சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் இறந்த தமது மகன் இயேசுவை தாய் மாதா தூக்கி கொண்டிருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது மாதா சிலையின் கண்கள் திறந்து மூடுவதையும், சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடுவதையும் அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளதுடன், திண்டுக்கல் – மேட்டுப்பட்டி பகுதி மக்கள் தேவாலயத்தில் குவிய ஆரம்பித்துள்ளனர். இந்த அதிசய சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த நபரொருவர் கூறுகையில், மாதா சிலையின் கண்கள் திறந்து மூடுவதாக பெண்ணொருவர் தெரிவித்தார். இருப்பினும் எங்களுக்கு தெரியவேயில்லை. கடைசியாக நன்கு அவதானித்த போது நான் மட்டுமல்ல என்னுடன் இருந்த பலர் அதனை பார்த்தனர்.

எல்லாரும் கூறினார்கள் கண் திறந்து மூடுவதாக. உண்மையிலேயே கண் திறந்து மூடியது என கூறினார். எனினும் இன்னுமொரு தரப்பினர் இது புரளியெனவும், கட்டுக்கதை எனவும் தங்கள் கருத்தை முன்வைக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முதல் நாள் மாலை இலங்கையில் களுத்துறை, கட்டுகுருந்த பகுதியிலுள்ள தூய பிலிப் மேரி தேவாலயத்திலுள்ள மாதா சிலையில் இருந்து கண்ணீர் வடிந்திருந்தது.

முதல் நாள் பெரியவெள்ளி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் இவ்வாறு இரத்த கண்ணீர் சிந்தும் அதிசயம் பதிவாகிய சந்தர்ப்பத்தில் இதனை காண பெருந்தொகை பக்கதர்கள் மாதா தேவாலயத்திற்கு படையெடுத்திருந்தனர். எனினும் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்ற அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் எட்டு இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டன.

இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்ட நிலையில் உயிர்த்த ஞாயிறு கொடூரத்தின் முன்னெச்சரிக்கையாகவே தூய பிலிப் மேரி தேவாலயத்திலுள்ள மாதா சிலையில் இருந்து இரத்த கண்ணீர் வடிந்திருந்ததாக பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தமை நினைவுப்படுத்ததக்கது.