வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமைப்பின் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!!(படங்கள்)

838

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் ஒன்றுகூடினர். காலை 9 மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வு மாலை 6 மணிவரை நடைபெற்றது. இறுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கில் அரசு மற்றும் இராணுவத்தினால் மக்கள் முகம்கொடுக்கப்படும் சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் காணி அபகரிப்பு, இராணுவ வெளியேற்றம், பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், அண்மையில் புள்ளிவிபரத் திணைக்களத்தால் சேகரிக்கப்படும் தகவல்களை முற்றாக நிராகரித்தல் மேலும் வலிகாமம், சம்பூர் உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் குடியேறுதல் உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டது.

இராணுவ பிரசன்னம் குறைக்கப் படவேண்டும், பெண்கள் பாதுக்காப்பாக தங்கள் தொழில்கள் மேற்கொள்ள, வாழ வழி ஏற்படுத்தப்படல் வேண்டும், அண்மையில் ஜனாதிபதியால் பேச்சுவார்த்தைக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பாராளுமன்றத் தெரிவுக் குழு நம்பகத் தன்மை அற்றது. இத்தகைய நம்பகத்தன்மை அற்ற குழுவால் தமிழருக்கான நியாயமான தீர்வினை வழங்க முடியாது என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது. காலப் போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து இது சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது. அவ்வாறு எதிராக வாக்களித்தவர்களுக்கு எதிராக கட்சி கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறான சந்திப்புக்கள், ஒன்றுகூடல்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இரா.சம்பந்தனிடம் பல கேள்விகள் பத்திரிகையாளர்களால் கேட்கப்பட்டன.

இரணைமடு நீர்ப் பங்கீடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இரா.சம்பந்தன் இது தொடர்பாக முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இனப் பிரச்சனைக்கான தீர்வு பற்றி கேட்டகப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது கட்சிகள் கூடி விரிவாக ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு பல பத்திரிகையாளர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவ் இழுத்தடிப்பு தொடரும் என விசனம் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப் பட்டமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் பொது கட்சி கூடி இவர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

மேலும் கூட்டமைப்பிற்குள் நிலவும் பிரிவுகள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இரா.சம்பந்தன் இது ஊகத்தை அடிப்படையாகக் கேட்கப்படும் கேள்வி எனவும் இதற்கு தன்னால் பதிலளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

vavuniya1vavuniya2vavuniya3vavuniya4vavuniya5