கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்புகள்!!

547

Chris

கிறிஸ்துமஸ் மரம்..

கிறிஸ்துமஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், கிறிஸ்துமஸின் போது இம்மரத்தைப் பயன்படுத்தியதால் இம்மரம் தற்போது கிறிஸ்துமஸ் மரம் என அழைக்கப்படுகிறது.

பர் மரங்களை கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ் ஜேர்மனியரையே சாரும். கி.பி.எட்டாம் நூற்றாண்டு அளவில் போனியாஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியார், ஜேர்மனிக்கு இறைச் சேவைக்காக வந்தார். ஒரு கிறிஸ்துமஸ் நாளில் இவர் ஒரு பர் மரத்தை ஆசீர்வதித்து குழந்தை இயேசுவுக்கு அதை ஒப்புக் கொடுத்தார்.

அது முதல் பர் மரம் கிறிஸ்துமஸ் மரம் ஆனது. அதிலிருந்து ஒவ்வொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போதும் இம்மரம் வீடுகளில் நடப்பட்டது. இதன் பிறகு ஜேர்மானிய இளவரசர் அல்பட்டுக்கும், இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

1841 ஆம் ஆண்டில் அல்பட், இங்கிலாந்து அரண்மனையில் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு, அதில் பல பரிசுப் பொருள்களைப் கட்டித் தொங்க விட்டார். மரத்தைச் சுற்றிலும் மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தார். பின்பு இப்பரிசுப் பொருள்களைப் பலருக்கும் வழங்கினார். இதன் பின்னரே கிறிஸ்துமஸ் மரம் இங்கிலாந்து முழுவதும் அமைக்கப்பட்டது. இத்தாலியில் கிறிஸ்துமஸ் மரத்தை ப்ரெஸ்பியோ என அழைக்கின்றனர். இம்மரத்தைச் சுற்றிலும் வண்ண வண்ண மெழுகுவத்திகளை ஏற்றி வைத்து பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர்.

கடவுள் வருகையை அறிவிக்கும் ஸ்டார்..

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பாகவே எல்லோர் வீடுகளிலும் பெரிய ஸ்டார்களை தொங்க விடுவர். இந்த பழக்கம் எப்படி வந்தது தெரியுமா, இயேசு கிறிஸ்து பிறந்தபோது அதனை அறிவிக்கும் படியாக விண்ணில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியது. எனவேதான் இந்த ஸ்டார் அமைக்கும் பழக்கம் வந்தது.

அப்போது ஆயர்கள் ஆடுமேய்த்துவிட்டு இரவில் தூங்கிய போது வானில் இருந்து தேவதை ஒன்று தோன்றி, பயப்படாதீர்கள் உங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் செய்தி ஒன்றை சொல்கிறேன். மக்களின் பாவத்தை போக்க கிறிஸ்து என்னும் ரட்சகன் பிறந்துள்ளார் என்று அறிவித்தார்.

அதன் பிறகு அவர்கள் இயேசு குழந்தையை கண்டு வணங்கி மகிழ்வுற்றனர். இவற்றை நினைவு கூறும் வகையில்தான் குடில்கள் அமைத்து, நட்சத்திரங்களை தொங்கவிட்டு, பரிசுபொருள்கள் கொடுத்து தங்கள் சந்தோஷத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர்.

இன்றும் எதியோப்பியாவில் ஒவ்வொரு மாதமும் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் விருந்துக்கு பதிலாக உபவாசம் இருக்கின்றனர். பால், வெண்ணெய், இறைச்சி, மீன் முதலியவற்றை உண்ணாமல் இருக்கின்றனர்.

பறவைக்கு உணவு..

ஸ்கண்டிநேவியாவில் கிறிஸ்துமஸ் விழாவை பறவைகளுக்கு விருந்தளிப்பதன் மூலம் கொண்டாடுகின்றனர். கோதுமைக் கதிர்களை தூண் போலக் கட்டி வயல்வெளியில் வைத்து விடுகின்றனர். இதன் கீழேயும் தானியங் களை பரப்பி வைத்திருப்பர்.

பனி அல்ல பகலவன்..

அவுஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விழா பழக்கம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற நாடுகளில் எல்லாம் இந்த நேரத்தில் பனி மூடிக் கிடக்கும். ஆகவே, அதை வயிட் தி கிறிஸ்துமஸ் என்று அழைப்பர். ஆனால், அவுஸ்திரேலியாவிலோ இது அவர்களுக்கு, “மிட் சமர்” வேனில் காலத்தின் இடைப்பகுதி. ஆகவே, கிறிஸ்துமஸ் நாளை சுற்றுலா சென்றும் மிகழ்ச்சியாக செலவழிக்கின்றனர்.

இனி எவரும் தவிக்கக்கூடாது..

அயர்லாந்து நாட்டினர் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தின இரவு ஜன்னல் ஓரங்களில் விளக்குகளை எரியவிடுவர். யோசப்பும், மரியாளும் குழந்தை பிறக்கும் நேரத்தில் இடமில்லாமல் தவித்தது போல் இன்று எவரும் தவிக்காமல் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைக்கும் விளக்குகளாம் அவை.

கிறிஸ்துமஸில் மாட்டுப் பொங்கல்..

கிறிஸ்துமஸ் நாளன்று பசுக்களுக்கு ராஜ மரியாதை செலுத்துகின்றனர் இத்தாலிய மக்கள். அன்று பசுக்களைக் குளிப்பாட்டி, அவைகளுக்கு விசேஷ மரியாதை செலுத்துவர். இயேசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த போது, அருகிலிருந்த ஒரு பசு, மாட்டுத் தொழுவத்தில் நிலவிய கடுங்குளிரிலிருந்து இயேசு நாதரைக் காப்பாற்றுவதற்காக அவரை அவ்வப்போது நெருங்கி பெருமூச்சு விட்டு அவருக்கும் வெப்பம் கொடுத்ததாம். அந்த நல்லெண்ணத்தின் அடிப் படையிலேயே இத்தாலியர் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களுக்கு மரியாதை செய்கின்றனராம்.

பெயர் சூட்டியவர்..

இயேசு பிறந்த விழாவானது ஆரம்பத்தில் ஒளி விருந்து என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த டே என்ற பெண்மணிதான் இயேசு பிறந்த புனித நாளுக்கு கிறிஸ்துமஸ் என்று பெயர் சூட்டினாள்.

பரிசுகள் வந்துவிடும் முன்னே..

ஹோலந்து தேசத்து குழந்தைகளுக்கு டிசம்பர் மாதத்தின் ஆரம்பித்திலேயே கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார் செண்ட் நிக்கொலஸ்.குதிரைகளின் மீது அமர்ந்த படி நீக்ரோ வேலைக்காரன் பீட்டர் பின் தொடர, பரிசு முட்டையோடு வருவார் நிக்கொலஸ்.

நாட்டுக்கு நாடு மாறுபடும் பெயர்..

எம் நாட்டில் டிசம்பர் மாதம் 25ம் திகதியை கிறிஸ்துமஸ் தினம் என்று அழைக்கிறோம்.

பிரெஞ்சு நாட்டினர் அதே நாளை நோயல் எனவும், ஜேர்மனியர் வெய்நேக்ஷன் எனவும், ஸ்பெயின் நாட்டினர், நேவிடட் எனவும், ஸ்கொட்லாந்து நாட்டினர் யூல் எனவும், இத்தாலியர் நாடோல்லே எனவும் அழைக்கின்றனர்.