ரணில் விக்ரமசிங்கவின் காதல் ஊமை காதல் : விமல் வீரவன்ஸ!!

1119

wimal weerawansaதேசிய கீதத்திற்கு கௌரவம் வழங்க முடியாத உணர்வற்ற அரசியல் தலைவர்களை கொண்டுள்ள எதிர்க்கட்சியிடமிருந்து இந்த நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை எதிர்பார்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இப்படியான எதிர்க்கட்சி நாடு பெற்ற வெற்றியை தொடர்ந்தும் தக்கவைத்து முன்னெடுத்துச் செல்லுமா என்ற கேள்வி எழுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

எதிர்க்கட்சிகள் இன்று எதனை கூறினாலும் நாட்டில் அரசியல் ரீதியான எந்த மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. இன்றுள்ள எதிர்க்கட்சியின் நாடு மீதான காதல் ஊமையின் காதல் போன்றது. காதலா இல்லையா என்பது கேட்பவருக்கும் புரியாது.

எதிர்க்கட்சித் தலைவரது நாட்டின் மீதான காதலும் இந்த ஊமை காதல் போன்றது. காதலா இல்லையா என்பது எவருக்கும் புரியாது.
இதனால் எதிர்கட்சியினரின் செயற்பாடுகள் மக்களுக்கு புரிவதில்லை என்பதால் மக்களும் பதிலளிப்பதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் தேசியக் கொடியை ஏற்ற போவதில்லை என தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதனை கூறவில்லை.

அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் மட்டுமா இதனை எதிர்க்க வேண்டும்?. நாட்டின் தேசியக் கொடியான சிங்கக் கொடி எதிர்க்கட்சியினருக்கும் உரித்தானதில்லையா?. இது பொதுவானது. இதனால் வாயை திறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சி விமர்சிக்க வேண்டும்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கவோ, அவர்களிடம் கேள்விகளை கேட்கவோ எதிர்க்கட்சிக்கு முடியாது என்றார்.