போராட்டம்

21ம் நூற்றாண்டு இனப்படுகொலை செய்து விட்டு களியாட்டம் செய்கிறார்கள் விழித்தெழு தமிழினமே! என தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 868 ஆவது நாளாக சுழற்சி முறை உணர்வுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினாலேயே இன்று (06.07.2019) இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் 21ம் நூற்றாண்டு இனப்படுகொலை செய்து விட்டு களியாட்டம் செய்கிறார்கள் விழித்தெழு தமிழினமே! என்ற வசனத்தினை தாங்கிய பதாதையினை ஏந்திய வண்ணமும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் மணிக்கூட்டு கோபுரம் வழியாக ஊர்வலமாக வந்த அவர்கள் தமது போராட்ட தளத்தை அடைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து அச்சம்பவத்திலிருந்து மக்களை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும் இனங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட பிரிவினையை முற்றாக மாற்றிக்கொள்ளும் நோக்கிலும் வவுனியா வாழ் மக்களை மனதளவில் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கிலும்,

இலங்கை இராணுவத்தின் 56வது படைப்பிரிவின் எற்பாட்டில் அக்கினி இசைக்குழுவின் இன்னிசை இரவு நிகழ்வு ஒன்று இன்று சனிக்கிழமை (06.07.2019) இரவு 7.00 மணியளவில் நகரசபை திறந்த மைதானத்தில் வர்த்தகர் சங்கம், வவுனியா முஸ்லிம் பள்ளிவாசல்களுடன் இணைந்து நடைபெறுகின்ற நிலையிலேயே இப் போராட்டம் முன்னேடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





