ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம்தான் : ஓய்வுபெற்ற மாலிக்கிற்கு மனைவி சானியாவின் ஆறுதல்!!

3


சோயிப் மாலிக்


டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தனது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் சோயிப் மாலிக், உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நேற்றைய தினம் போட்டி முடிந்த பின்னர், சக அணி வீரர்கள் மாலிக்கை தோளில் சுமந்தபடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


அதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற மாலிக்கின் சாதனைகளை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல டென்னிஸ் வீராங்கனையும், மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா தனது கணவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.


அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு கதைக்கும் முடிவு உண்டு. ஆனால், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம் தான். 20 ஆண்டுகளாக உங்கள் நாட்டுக்காக பெருமையுடன் ஆடியுள்ளீர்கள். நானும் மகன் இன்ஷானும் நீங்கள் யார் என்பது பற்றியும், நீங்கள் சாதித்திருப்பது குறித்தும் பெருமை அடைகிறோம்’ என தெரிவித்துள்ளார்.