மாதவிடாயை தவிர்க்க கருப்பையை நீக்கும் பெண்கள் : அதிர வைக்கும் ஒரு கிராமத்தின் நிலை!!

360

கிராமத்தின் நிலை

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் பலர், தங்களின் வேலைகளுக்காக கருப்பையை அகற்றுவதாக அதிர வைக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மேற்கு மாவட்டங்களுக்கு வாழ்வாதாரத்தை தேடி வருகின்றன.

அவர்கள் பெரும்பாலும் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் 6 மாத காலம் தங்கி, அறுவடை வேலைகளை செய்து வருகின்றனர். இவ்வாறாக பணிபுரிபவர்களில் பெண்களே அதிகம். எனினும், கரும்பு வெட்டுதல் என்பது கடினமான பணி என்பதாலும், மாதவிடாய் காரணங்களால் அவர்கள் விடுப்பு எடுத்தால் வேலை பாதிக்கும் என்பதாலும், பெண்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டப்படுகிறது.

இதன் காரணமாக அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. சுகாதாரமற்ற, எந்தவித அடிப்படை வசதியும் அற்ற சூழலிலேயே கூடாரங்கள் அல்லது சிறிய குடிசைகளில் குறித்த பெண்கள் தங்க வைக்கப்படுகின்றனர். அறுவடையின்போது இரவு நேரங்களில் கூட அவர்கள் வேலை செய்ய வேண்டும்.

இவ்வாறாக பல நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் அந்த பெண்கள், சிறிய பிரச்சனைகளுக்கு கூட கருப்பையை எடுக்க சில மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும், இளம் வயதிலேயே திருமணமான பெரும்பாலான பெண்கள், இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருப்பதால் கருப்பை எடுப்பது சரி என்றே நினைத்து அதனை அகற்றுவதாக தெரிகிறது.

இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் ‘கருப்பை அற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக’ உள்ளன. 40 வயதுக்கும் குறைவான பல பெண்கள் கருப்பையை அகற்றுவதால், அறுவை சிகிச்சைக்கு பின்னர் தங்களின் உடல்நிலை மேலும் மோசமடைவதாக தெரிவிக்கின்றனர்.

இதேபோல் தமிழகத்தில் உள்ள பல ஆடை தொழிற்சாலைகளில், மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு வரும் வலியை தவிர்க்க மாத்திரைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அவை பெரும்பாலும் மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த மருந்துகளால் மன அழுத்தம், பதற்றம், கருப்பையில் கட்டிகள், சிறுநீர் குழாயில் தொற்று, கருக்கலைப்பு போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படுவதாக அப்பெண்கள் தெரிவிக்கின்றனர். எனினும், தமிழகத்தில் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.