சரணடைந்தது இந்திய அணி : இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து!!சரணடைந்தது இந்திய அணி


இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது.நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது. இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.


240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுகளில் திணறி அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற அடுத்த வந்த தினேஷ் கார்த்திக்கும் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடி ஒன்பதாவது ஓவரின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.


இதனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்கள‍ை பெற்றது. 5 ஆவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த் மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அதனால் இந்திய அணி 15 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டத்தையும், 20 ஓவரில் 70 ஓட்டத்தையும் பெற்றது. எனினும் 22.5 ஆவது ஓவரில் ரிஷாத் பந்த் 32 ஓட்டத்துடன் மிட்செல் சாண்டனரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் (71-5) . தொடர்ந்து தோனி களமிறங்கிய துடுப்பெடுத்தாட மறுமுணையில் பாண்டியா 30.3 ஆவது ஓவரில் 32 ஆட்டமிழந்தார் (92-6).

7 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜடேஜா தோனியுடன் கைகோர்த்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க இந்திய அணியின் ஓட்ட குவிப்பு வேகம் அதிகரித்தது. அதன்படி 35 ஓவரில் 119 ஓட்டங்களையும், 40 ஓவரில் 150 ஓட்டங்களையும் இந்தியா பெற்றது. இந் நிலையில் 41.5 ஆவது ஓவரில் ஜடேஜா அரைசதம் விளாசினார்.

இதேவேளை 44 ஆவது ஓவருக்காக ஜேம்ஸ் நீஷம் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரில் இரண்டு பிடியொடுப்புக்களை நியூஸிலாந்து அணி நழுவ விட்டது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 45 ஓவருக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த் நிலையில் 188 ஓட்டங்கள‍ை பெற்றது. ஆடுகளத்தில் ஜடேஜா 66 ஓட்டத்துடனும், தோனி 33 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடிவர வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 52 ஓட்டம் தேவைப்பட்டது.

இதன் பின்னர் தோனி மற்றும் ஜடேஜாவின் இணைப்பாட்டம் 45.3 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டதுடன் இந்திய அணி 46.3 ஓவரில் 200 ஓட்டங்களை பெற்றது. இந் நிலையில் ஜடேஜா 47.5 ஆவது ஓவரில் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் 208-7) இதனால் வெற்றிவாய்ப்பு நியூஸிலாந்து அணிப் பக்கம் திரும்பியது.

ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ஓட்டம் என்ற நிலையுமிருக்க தோனி 48.3 ஆவது ஓவரில் 50 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சஹால் களமிங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி இறுதியாக 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 18 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டுக்கயைும், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்டனர் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.