இந்திய அணியில் பிளவா? கோஹ்லி-ரோஹித்துக்கு ஆதரவாக பிரிந்த வீரர்கள்?

579

இந்திய அணியில் பிளவா?

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அணிக்குள் பிளவு உள்ளதாகவும், கோஹ்லி-ரோஹித்திற்கு ஆதரவாக அணி வீரர்கள் பிரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் தோல்விக்குப் பொறுப்பேற்று கோஹ்லியை கேப்டன் பொறுப்பில் மாற்றிவிட்டு, ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தைனிக் ஜாக்ரன் என்ற நாளேடு, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோஹ்லியும் சேர்ந்துகொண்டு அணியில் தன்னிச்சையான பல முடிவுகளை எடுக்கிறார்கள்.

தங்களுக்கு தேவைப்பட்ட வீரர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். மற்றவர்களிடம் கலந்து பேசாமல் முடிவெடுப்பதால், அணியில் நல்ல விதமான சூழல் கெட்டு பிளவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறுகையில்,

கோஹ்லி தனக்கு தேவையான, தன்னுடைய பேச்சைக் கேட்டு நடப்பவர்களை மட்டுமே அணியில் முன்னுரிமை தருகிறார். ரோஹித் ஷர்மா அறிவுறுத்தும் வீரர்களை அவர் தேர்வு செய்வதில்லை. குறிப்பாக அம்பத்தி ராயுடுவை விடுத்து 4வது வரிசைக்கு விஜய் ஷங்கரை தேர்வு செய்ததே ஒரு தரப்பான முடிவு தான்.

கே.எல்.ராகுல் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக மிகவும் மோசமாக செயல்பட்டபோதிலும், அவருக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு இருந்ததால் அவர் அணியில் நீடித்தார். அத்துடன் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் 4வது வரிசைக்கு தெரிவான ராகுல், தொடக்க வீரராக களமிறங்கினார்.

அதேபோல் தொடர்ந்து மோசமாக பந்துவீசிய போதிலும், ஐ.பி.எல்லில் கோஹ்லியின் ஆர்.சி.பி அணியில் விளையாடியதால் சாஹலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பல வீரர்களுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இருவரையும் பிடிக்கவில்லை.

பி.சி.சி.ஐ நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆதரவை, ரவி சாஸ்திரி பெற்றிருப்பதால் அவரும், விராட் கோஹ்லியும் எந்த விதமான முடிவுகளை எடுத்தாலும் அதற்கு ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில், ரோஹித் ஷர்மாவை புதிய கேப்டனாக உருவாக்க வேண்டும் என்றும் வீரர்களிடையே பேசப்படுகிறது என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.