யுத்தகால இழப்பீடுகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியான கணிப்பீடு மேற்கொள்ள தீர்மானம்!!

332

TNAயுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட கணிப்பீடு ஒன்றை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

விரைவில் வடமாகாண சபையின் ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பாக தெரிவித்தார்.

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பிலும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு கணிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் இந்த கணிப்பீட்டில் நம்பிக்கை இல்லை என்றும், போலியான தகவல்களை மேற்கொண்டு சர்வதேசத்திடம் சமர்ப்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த நிலையில் உண்மையான தகவல்களை அறிந்துக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்த ஆய்வினை மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்பை தனித்து மேற்கொள்ள வடமாகாண சபை முடிவு..

இலங்கையில் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் புள்ளிவிபர தொகை மதிப்பீட்டு திணைக்களம் நடத்தி வரும் கணக்கெடுப்பில் நம்பிக்கையில்லை என்பதால் தனித்து தாம் ஒரு கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக வடக்கு மாகாணசபை அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியினால் இந்த கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. எனினும் இது போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை குறைத்து காட்டும் முயற்சியாகவே இருக்கும் என்று வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதற்கு மாற்று நடவடிக்கை அவசியம் என்ற அடிப்படையில் வடமாகாணசபை தனித்து இந்த உயிர் மற்றும் சொத்தழிவு கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பின்படி 37வருட போரில் 100.000 பேர் கொல்லப்பட்டனர்.

2009 இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். எனினும் இதனை குறைத்துக்காட்டவும் விடுதலைப்புலிகளால் மனித கேடயங்களாக பொதுமக்கள் வைக்கப்பட்டிருந்தனர் என்பதை காட்டுவதற்குமே அரசாங்கம் முயற்சிக்கிறது.

எனவே இறுதிபோரில் கொல்லப்பட்டனர், கணவர்மாரை இழந்தவர்கள், சொத்தழிவுகள், காணாமல் போனவர்களின் சரியான தகவல்களை வடமாகாண சபை திரட்டப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.