வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்க அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது!!

527

Strikeகிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக வடஇலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க ஒன்றியத்தின் செயலாளர் அன்டன் பிரேமகாந்தன் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கம்பனியின் கீழ் பதிவுசெய்யப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடும் சில பஸ்கள், மார்க்க அனுமதியை மீறி வேறு மார்க்கங்கங்களின் ஊடாக, சேவையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக வடஇலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வடஇலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ஒன்றியத்தினால் பரந்தன் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்பட்டிருந்தது.

குறித்த மார்க்க அனுமதியை மீறி பஸ்கள் சேவையில் ஈடுபடுவதால், வட மாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை இன்று மதியம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கம்பனி தலைவர் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப்பட்ட காலப்பகுதியில் மக்களுடைய போக்குவரத்து நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு வவுனியா மாவட்ட அரச அதிபரால் வழங்கப்பட்ட மார்க்க அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் தாம் சேவையில் ஈடுபட்டு வருவதாக வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கம்பனி தலைவர் இராஜேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பொலிஸ் பாதுகப்புடன் வவுனியா பஸ்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கம்பனியின் தலைவர் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.