வவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு : நேர்முகப்பரீட்சை இறுதி நாள்!!

835

பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் தமிழ் பேசும் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக பொலிசாருக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று (23.07) வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் திணைக்களத்தில் நடைபெற்றது.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தலைமையில் நடைபெற்ற பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான யு.எல்.உடவத்த மற்றும் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஓசித குணதிலக, வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் ஆகியோர் நடத்தியிருந்தனர்.

வவுனியாவில் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெற்ற பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் 1500 இளைஞர்கள் நேர்முகப்பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். இதில் 111 பெண்களும் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

வவுனியாவில் நடைபெற்ற பொலிசாருக்கான நேர்முகப்பரீட்சையில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் கடமையாற்றுவதற்கு 10 ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளின் தேவை இருக்கிறது. இருந்தபோதும் மிகக் குறைவான அளவிலேயே தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

எனவே இளைஞர் யுவதிகள் பொலிஸ் திணைக்களத்தில் ஆர்வத்துடன் இணைந்துகொள்ள முன்வரவேண்டும் என பொலிஸ் திணைக்களத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான மருத்துவப் பரிசோதனையானது வடபகுதி இளைஞர்களுக்கு காங்கேசந்துறையிலும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு கொழும்பிலும் நடைபெறும் என வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் தென்னிலங்கையில் நடைபெற்று வந்த பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சைகள் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.